போலீசார் துன்புறுத்தல் காரணமா?; புதுக்கோட்டை அறந்தாங்கியில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த பெண் தீக்குளித்து தற்கொலை..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த பெண் ஒருவர் காவல் நிலையம் முன்பு தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் காந்தி நகரை சேர்ந்தவர் பாண்டி என்கிற ராஜேந்திரன். இவரது மனைவி செல்வி. பாண்டி ஏற்கனவே திருட்டு வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக செல்வி திருட்டு நகை ஒன்றை வாங்கி விற்றதாக கூறப்படுகிறது.

அது தொடர்பாக விசாரணை செய்வதற்காக கடந்த 15 நாட்களுக்கு முன்பாக அறந்தாங்கி காவல் நிலையத்திற்கு செல்வி அழைக்கப்பட்டுள்ளார். அப்போது விசாரணைக்கு அழைத்து காவல் துறையினர் அவரை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, காவல் நிலையத்திற்கு வந்த செல்வி திடீரென உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி கொண்டு காவல் நிலையத்திற்குள் செல்ல முற்பட்டார். அப்போது, அருகிலிருந்த காவலர்கள் தீயை அணைத்து ஆம்புலன்ஸ் மூலமாக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீக்காயம் உடல் முழுவதும் பரவி கிட்டத்தட்ட 60 விழுக்காடு எரிந்த நிலையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்வாறு விசாரணைக்கு அழைத்து துன்புறுத்தியதாக, பெண் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: