அரசு ஊழியர் காப்பீடை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து அரசாணை: கொரோனா சிகிச்சையும் சேர்ப்பு

விருதுநகர்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மருத்துவ காப்பீடு புதிய நல்வாழ்வு காப்பீட்டு திட்டம் என்ற பெயரில் 1.7.2016 முதல் 30.6.2020 வரை 4 ஆண்டுகளுக்கு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது. இதில் மருத்துவ சிகிச்சைக்கு 4 ஆண்டுகளுக்கு ரூ.4 லட்சம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை எனில் ரூ.7.50 லட்சம் வரை வழங்கப்படுகிறது. மருத்துவ காப்பீட்டு திட்டம் வரும் ஜூன் 30ல் நிறைவடைய இருந்ததால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் சுமார் 10 லட்சம் பேர் மருத்துவ சிகிச்சை பெறுவது கேள்விக்குறியாகும் நிலை இருந்தது.

ஜூலை 1 முதல் சிகிச்சை பெறுவதற்கு புதிய ஒப்பந்தம் போடுவதற்கு டெண்டர் விடப்படாத நிலையில், உடனடியாக தமிழக அரசு மாற்று உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென தினகரன் நாளிதழில் நேற்று (ஜூன் 23) செய்தி வெளியானது. இதை தொடர்ந்து தமிழக அரசின் முதன்மை செயலாளர் கிருஷ்ணன் அதிரடியாக நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். ‘‘தற்போதுள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் 1.7.2020 முதல் 30.6.2021 வரை காப்பீடு ஓராண்டு காலம் நீட்டிப்பு செய்யப்படுகிறது. ஏற்கனவே அளிக்கப்பட்டு வரும் ரூ.4 லட்சம் மற்றும் உறுப்பு மாற்று சிசிச்சைக்கு ரூ.7.50 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு சிகிச்சைக்கு வழங்கப்படும்’’ என அரசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு கொரோனா சிகிச்சைக்கான காப்பீடும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ரூ.4 லட்சத்திற்குள் அளிக்கப்படும். இதில் கொரோனா சிகிச்சை பெறும் நபருக்கு ஐசியு சிகிச்சை வென்டிலேட்டர் தேவையின்றி ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.6,500, வென்டிலேட்டருடன் ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.8,500 அளிக்கப்படும். கொரோனா அபாயகரமற்ற நிலை எனில் ஏ1 மற்றும் ஏ2 மருத்துவமனைகளில் ஒரு நாள் செலவினம் தனியறை மற்றும் மருந்திற்கு ரூ.9,500, ஏ3 முதல் ஏ6 மருத்துவமனைகளில் ஒரு நாள் செலவினம் தனியறை மற்றும் மருந்திற்கு ரூ.7,500 வரை செலவினம் வழங்கப்படும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: