கொரோனாவை தடுக்க புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சித்த மருந்தை ஆய்வுசெய்யவேண்டும்: நிபுணர் குழு அமைக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: கொரோனாவுக்கு சித்த மருத்துவர் தயாரித்த இம்ப்ரோ சித்த மருந்தை, நிபுணர் குழு ஆய்வு செய்ய வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் சுப்ரமணியன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசை கட்டுப்படுத்த 66 மூலிகைகள் அடங்கிய ‘இம்ப்ரோ’ என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளேன். இந்த மருந்தை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்த அனுமதிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் நேற்று மீண்டும் விசாரித்தனர்.

மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கதிர்வேலு ஆஜராகி, ‘‘கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சித்தா, ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி மருந்துகள் வழங்கப்படுகின்றன. புதிய கண்டுபிடிப்பு தொடர்பாக இதுவரை 35 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவற்றின் ஆவணங்களின் அடிப்படையில் பரிசீலிக்கப்படுகிறது. மனுதாரர் கண்டுபிடிப்பிற்கு ‘பேடண்ட் ரைட்’ கோருகிறார். வைராலஜி சோதனைக்கு முன் ஆய்வு முடிவுகள் சமர்பிக்கப்படவில்லை. அதனால், இவரது கண்டுபிடிப்பை இன்னும் ஆய்வுக்கு உட்படுத்தவில்லை’’ என்றார்.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, ‘‘மத்திய அரசின் ஆயுஷ் பரிந்துரைப்படி யுனானி மருத்துவத்திலுள்ள பெகிண்டா, உன்னாப், சபிஷ்டா போன்ற மருந்துகளும், ஆர்சனிகம் ஆல்பம் 30 சி, பிரையோனியால்பா ஆகிய ஹோமியோபதி மருந்தும், தசமூல கபத்ராம் கசாயம், இந்துபாத கசாயம், வியக்ரியாதி கசாயம் ஆகிய ஆயுர்வேத மருந்துகளும், அமுக்கரா சூரணம், நெல்லிக்காய் லேகியம், கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் ஆகிய சித்த மருத்துகளும் தரப்படுகிறது. சென்னை அரும்பாக்கத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் புதிய ஆராய்ச்சி பிரிவு துவக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘தமிழக அரசு தரப்பில் பல்வேறு தரப்பைச் சேர்ந்த மருத்துவர்களைக் கொண்ட நிபுணர் குழுவை அமைக்க வேண்டும். இந்த குழு முன் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் அலுவலகத்தில் மனுதாரர் வரும் 26ம் தேதி ஆஜராகி, தனது கண்டுபிடிப்பு குறித்து விளக்கமளிக்க வேண்டும். இந்த கண்டுபிடிப்பை நிபுணர் குழுவினர் ஆய்வு செய்து ஜூன் 30ல் அறிக்ைக தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

Related Stories: