காணாமல் போன சமூக இடைவெளி பஸ், இறைச்சி கடைகளில் கூட்டமோ கூட்டம்: கண்காணிப்பு அதிகாரிகள் இல்லாததால் அலட்சியம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று 300ஐ நெருங்கும் நிலையில் பரவலைக் கட்டுப்படுத்த பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் எதையும் மக்கள் பின்பற்றாத காரணத்தால் சென்னையை போன்ற நிலைமை உருவாகி விடுமோ என்ற அச்சம் உருவாகி உள்ளது. கொரோனா தொற்று இந்தியாவில் வேகம் பெற்று வரும் நிலையில், அதிகம் பாதிப்புள்ள 4 மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பரவல் அதிகம் உள்ளது. சென்னை மாவட்டத்தில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் சென்னையை விட்டு வெளியே சொந்த மாவட்டங்களில் தஞ்சம் புகுந்ததால், பரவல் தென்மாவட்டங்களில் அதிகரிக்க துவங்கி உள்ளது. அதை தொடர்ந்து கன்னியாகுமரி, மதுரை, திருவள்ளுர், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களிலும் அதிகமாகி வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 300ஐ நெருங்கும் நிலையில், சென்னையில் இருந்து வந்து தனிமை முகாம்களில் பரிசோதனை முடிவுகளுக்கு காத்திருப்போர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் மாவட்டத்தின் அனைத்து நகரங்களிலும் சென்னையில் இருந்து வந்து தனிமைப்படுத்தாமல், பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ளலாமல் இருப்போர் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், அதை உறுதி செய்யும் வகையில் தொற்று அதிகமாகி உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ஓடும் அரசு பஸ்களில் மாஸ்க் அணிந்த 60 சதவீத பயணிகளை மட்டும் ஏற்ற வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். பயணிகளுக்கு சானிடைசர் வழங்க வேண்டுமென்ற உத்தரவுகள் எதுவும் பின்பற்றவில்லை. மேலும் பரவல் துவங்கிய மார்ச். மாதத்தில் கடைவீதிகள், மார்க்கெட்டுகள், மக்கள் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதிப்பு, எச்சரிக்கைகளை அதிகாரிகள் விடுத்தனர். ஆனால், தற்போது எந்த அதிகாரியும் கண்காணிப்பை மேற்கொள்ளவில்லை.

விருதுநகரை ஒட்டி ரோசல்பட்டி ஊராட்சி பாண்டியன்நகரில் உள்ள கோழி, ஆட்டு இறைச்சி கடைகளில் தான் ஒட்டுமொத்த விருதுநகர் அதை சுற்றிய ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் இறைச்சி வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் ஞாயிற்று கிழமைகளில் இறைச்சி கடைகளில் மக்கள், மாஸ்க் இன்றி சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இறைச்சி வாங்கி செல்கின்றனர். சுயக்கட்டுப்பாடு, கண்காணிப்பு, சட்ட நடவடிக்கைகள் எதுவும் இல்லாததால் மக்கள் இஷ்டத்திற்கு திரிகின்றனர். இதனால் விருதுநகர் மாவட்டத்திலும் விரைவில் சென்னையை போன்று கொரோனா பரவல் வரும் நாட்களில் அதிகமாகும். கண்காணிப்பை உறுதி செய்ய வேண்டிய உயர் அதிகாரிகள் வீடு மற்றும் அலுவலகத்தை விட்டு வெளியே வர அஞ்சி தங்களை தற்காத்துக் கொள்ளும் முயற்சியில் இருக்கின்றனர். இதனால் விருதுநகர் மாவட்டத்தில் தொற்று பரவல் அதிகரிப்பதை தடுக்க வழியில்லை என சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

Related Stories: