கொரோனாவுக்கு பலியான சென்னை இன்ஸ்பெக்டருக்கு காவல் நிலையங்களில் மவுன அஞ்சலி

காஞ்சிபுரம் : கொரோனாவுக்கு பலியான சென்னை இன்ஸ்பெக்டருக்கு, காவல் நிலையங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

சென்னை, மாம்பலம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பாலமுரளி, கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். தமிழக காவல்துறை சார்பில், இறந்த பாலமுரளிக்கு, அஞ்சலி செலுத்தும் விதமாக நேற்று மாலை அவரவர் பணிபுரியும் இடங்களில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த டிஜிபி திரிபாதி அறிவுறுத்தினார்.

அதன்பேரில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இன்ஸ்பெக்டர் பாலமுரளி படத்துக்கு மெழுகுவர்த்தி ஏற்றி, மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. காஞ்சிபுரத்தில் இன்ஸ்பெக்டர்கள் தாலுகா பாஸ்கரன், விஷ்ணு காஞ்சி சுரேஷ் சண்முகம், சிவகாஞ்சி நடராஜன் ஆகியோர் தலைமையில் அந்தந்த காவல் நிலையங்களில் மறைந்த இன்ஸ்பெக்டர் பாலமுரளி படத்துக்கு மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதேபோன்று, மதுராந்தகம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஆனந்த்ராஜ், எஸ்ஐ பரசுராமன் உள்பட காவல்துறையினர் மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: