குஜராத் மாநிலங்களவை தேர்தல் வெளிமாநிலங்களில் தங்கிய காங். எம்எல்ஏ.க்கள் வருகை: பாஜ.விடம் இருந்து காப்பாற்ற முயற்சி

அகமதாபாத்: குஜராத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெறுவதால்,  குதிரை பேரத்தை தவிர்க்க 20 காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் விடுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  குஜராத்தில் நான்கு மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதில், காங்கிரஸ், பாஜவுக்கு தலா 2 இடங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், 3வதாக ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ள பாஜ., காங்கிரஸ் எம்எல்ஏ.க்களை விலைக்கு வாங்கி வருகிறது. சில எம்எல்ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு, பாஜ.வில் இணைந்ததால் உஷாரான காங்கிரஸ்  மேலிடம், மற்ற எம்எல்ஏ.க்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தனது 65 எம்எல்ஏ.க்களை 4 குழுவாக பிரித்த காங்கிரஸ், அவர்களை  பாதுகாப்பாக விடுதிகளில் தங்க வைத்துள்ளது. இதில், 20 எம்எல்ஏ.க்கள் ராஜஸ்தானில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இவர்கள்  வடக்கு குஜராத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் ராஜஸ்தானில் இருந்து நேற்று அழைத்து வரப்பட்டு, அகமதாபாத்தில உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

இது குறித்து, மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணிஷ் தோஷி கூறுகையில், ``நாளை மறுநாள் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், சவுராஷ்டிரா, மத்திய, தெற்கு குஜராத் பகுதிகளையும் சேர்ந்த எம்எல்ஏ.க்கள் நாளை (இன்று) அகமதாபாத் அழைத்து வரப்பட்டு காந்தி நகரில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்படுவார்கள்,’’ என்றார். இதனிடையே, ராஜஸ்தானில் காங்கிரசை தொடர்ந்து பாஜ எம்எல்ஏ.க்களும் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அக்கட்சியின் மாநில தலைவர் சதீஸ் பூனியா கூறுகையில், ``எம்எல்ஏ.க்களில் பெரும்பாலானோர் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதால் மாநிலங்களவை தேர்தல் குறித்து இரண்டு நாட்கள் பயிற்சி அளிப்பதற்காக அவர்களை ஒன்றாக தங்க வைக்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. அத்துடன் ஆத்ம நிர்பார் பாரத் அபியான் பற்றியும் கலந்து ஆலோசிக்கப்பட உள்ளது என்று கூறினார்.

Related Stories: