நீண்ட இடைவெளிக்கு பின் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சென்னையில் பெட்ரோல் ரூ.76.07 ஆனது

புதுடெல்லி: மாற்றமின்றி இருந்த பெட்ரோல், டீசல் விலை, மிக நீண்ட இடைவெளிக்கு பின் முதல் முறையாக நேற்று உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் ₹76.07 ஆகவும், டீசல் ₹68.74 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி அமைக்கின்றன. ஆனால், இந்தியாவில் கொரோனா பரவலை தொடர்ந்து  பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. கடைசியாக கடந்த மார்ச் 16ம் தேதி விலை மாற்றி அமைக்கப்பட்டது. அதன்பிறகு, மத்திய மற்றும் மாநில அரசுகள் வரியை உயர்த்தியபோதுதான் விலை உயர்ந்தது.   பிரன்ட் கச்சா எண்ணெய் அடிப்படையில்தான் இந்தியாவில் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த விலை கடந்த ஜனவரியில் இருந்து இதுவரை சுமார் 60 சதவீதம்  சரிந்துள்ளது. ஆனால், கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி உச்ச விலையை எட்டிய பிறகு, கடந்த ஏப்ரல் வரை பெட்ரோல் 10 சதவீதம், டீசல் 8.5 சதவீதம் மட்டுமே  குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், கடந்த ஏப்ரலில் பிரண்ட் கச்சா எண்ணெய் பேரல் 20 டாலராக குறைந்து விட்டது. இருப்பினும் அதன் பலன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கவில்லை.

இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. ஒரு பேரல் 42 டாலரை தாண்டி விட்டது. இதன் எதிரொலியாக இந்திய எண்ணெய் நிறுவனங்களும் 80 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையை முதல் முறையாக நேற்று அதிகரித்துள்ளன. இதன்படி சென்னையில் நேற்று பெட்ரோல் 53 காசு உயர்ந்து ₹76.07ஆகவும், டீசல் 52 காசு உயர்ந்து ₹68.74 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. எண்ணெய் நிறுவனங்கள் கடைசியாக கடந்த மார்ச் 16ம் தேதி பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைத்தன.  அப்போது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹72.28 ஆகவும், டீசல் ₹65.71 ஆகவும் இருந்தது. மே 3ம் தேதி வரை இதே விலை நீடித்தது. பின்னர், தமிழக அரசு வரியை உயர்த்தியதால் சென்னையில் கடந்த மே 4ம் தேதி பெட்ரோல் ₹3.26 உயர்ந்து, ₹75.54 ஆனது. டீசல் ₹2.51 உயர்ந்து ₹68.22 ஆனது. தற்போது 34 நாட்களுக்கு பிறகு சென்னையில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. பிற நகரங்களை பொறுத்தவரை பெட்ரோல் 60 காசு வரை உயர்ந்துள்ளது. இதன்படி நேற்று பெட்ரோல் டெல்லியில் ₹71.86, மும்பையில், ₹78.91, ஐதராபாத்தில்  ₹74.61, பெங்களூருவில் ₹74.18 எனவும், டீசல் விலை டெல்லியில்  ₹69.99, மும்பையில்  ₹68.79, ஐதராபாத்தில் ₹68.42, பெங்களூருவில் ₹66.54 ஆகவும் இருந்தது.

* ஏப்ரலில் கச்சா எண்ணெய் பேரல் 20 டாலருக்கு கீழ் சரிந்தபோது, அதன் பலன் மக்களுக்கு கிடைக்கவில்லை.

* இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடைசியாக கடந்த மார்ச் 16ம் தேதி விலையை மாற்றி அமைத்தன. அதன்பிறகு, மாநில அரசுகள் வரியை உயர்த்தியபோது விலையில் மாற்றம் ஏற்பட்டது.

* பெட்ரோல், டீசல் விற்பனை சரிவு மற்றும் ஊரடங்கால் பிற வருவாய் ஆதாரங்கள் குறைந்ததை ஈடுகட்ட, மத்திய, மாநில அரசுகள் வரியை உயர்த்தி விட்டன. தமிழக அரசு வரியை உயர்த்தியதால் சென்னையில் கடந்த மே 4ம் தேதி பெட்ரோல் ₹3.26 உயர்ந்து, ₹75.54 ஆனது. டீசல் ₹2.51 உயர்ந்து ₹68.22 ஆனது. தற்போது 34 நாட்களுக்கு பிறகு சென்னையில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது.

விலை இன்னும் உயருமா?

கச்சா எண்ணெய் விலை குறைந்தால், எண்ணெய் வள நாடுகளின் வருவாய்க்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்க, உற்பத்தி குறைப்பை அமல்படுத்துகின்றன. இதன்படி, மே, ஜூன் மாதங்களில் நாள் ஒன்றுக்கு 97 லட்சம் பேரல் உற்பத்தியை குறைக்க ஒபெக் நாடுகள் கடந்த ஏப்ரலில் முடிவு செய்தன. இதன் பலனாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த உற்பத்தி குறைப்பை ஜூலை வரை நீட்டிக்க ஒபெக் நாடுகள் மற்றும் ரஷ்யா முடிவு செய்துள்ளன. இவ்வாறு தொடர்ந்து உற்பத்தி குறைக்கப்பட்டால், பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர வாய்ப்புகள் உள்ளன.

Related Stories: