அட்சய திருதியை ஒட்டி, ஒரு சவரன் ரூ.1,240 அதிகரித்த போதிலும் தமிழகத்தில் ரூ.14,000 கோடி மதிப்பிலான தங்கம் விற்பனை!!

சென்னை : அட்சய திருதியை ஒட்டி, நேற்று தமிழ்நாடு முழுவதும் உள்ள நகைக்கடைகளில் ரூ.14,000 கோடி மதிப்பிலான தங்கம் விற்பனையாகியுள்ளதாக வியாபாரிகள் தகவல் அளித்துள்ளனர். அட்சய திருதியை ஒட்டி தமிழகம் முழுவதும் நகைக்கடைகளில் நேற்று கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதல் நள்ளிரவு வரை கடைகள் திறக்கப்பட்டிருந்தன. அதே நேரத்தில் தங்கத்தின் விலை 3 தடவை உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரன் ரூ1240 உயர்ந்து, சவரன் ரூ 54,160-க்கு விற்பனையானது.  தங்கம் விலை அதிரடியாக உயர்ந்த போதிலும், விலையை பொருட்படுத்தாமல் நகை பிரியர்கள் நகைகளை வாங்கிச் சென்றனர். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள நகைக்கடைகளில் ரூ.14,000 கோடி மதிப்பிலான தங்கம் விற்பனையாகியுள்ளது.

விற்பனையான தங்கத்தில் 80 சதவீதம் ஆபரண நகைகள், 20 சதவீதம் நாணயங்களாகும்.2023-ம் ஆண்டு அட்சயதிருதியை நாளில் ரூ.11,000 கோடிக்கு நகைகள் விற்பனை ஆகியிருந்தது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அட்சய திருதியை நாளில், 25 முதல் 30 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, தங்கம் விலை இன்று கணிசமாக குறைந்துள்ளது. அதன் படி இன்று மே 11ம் தேதி , 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,750க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.54,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்து ஒரு கிராம் ரூ.5,529க்கும், சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,232க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.90.50க்கும், ஒரு கிலோ ரூ,90,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

The post அட்சய திருதியை ஒட்டி, ஒரு சவரன் ரூ.1,240 அதிகரித்த போதிலும் தமிழகத்தில் ரூ.14,000 கோடி மதிப்பிலான தங்கம் விற்பனை!! appeared first on Dinakaran.

Related Stories: