ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு; மக்கள் சாலை மறியலால் பரபரப்பு: கோவையில் போலீசார் குவிப்பு

கோவை: கோவையில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளத்தின் அருகே சுமார் 1500க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. இங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாநகராட்சி நிர்வாகத்தால் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டு, கீரனத்தம், மலுமிச்சம்பட்டி, காபி கடை உள்ளிட்ட பகுதிகளில் குடிசை மாற்று வாரியத்தால் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக 992 குடும்பத்தினர் வீடுகளை காலி செய்து விட்டு அரசு ஒதுக்கிய வீடுகளுக்கு சென்று விட்டனர். இந்நிலையில் காலியாக உள்ள 992 வீடுகளை கோவை மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் இடிக்க திட்டமிடப்பட்டது. இதனையடுத்து நேற்று 200க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டன. இந்நிலையில் மீதமுள்ள வீடுகளை இடிக்க இன்று காலை அதிகாரிகள் சென்ற போது அங்கு காலி செய்யாமல் இருக்கும் மற்ற குடியிருப்பு வாசிகள் ஆக்கிரமிப்பு விடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் தடாகம் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அவர்கள் ‘‘எங்கள் வீடுகளை காலி செய்ய மாட்டோம், வீடுகளை இடிக்கவும் விட மாட்டோம்’’ என்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Related Stories: