திருப்பதியில் ஜேஷ்டாபிஷேகம் நிறைவு: மலையப்ப சுவாமிக்கு மீண்டும் தங்கக்கவசம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம் நிறைவுபெற்றதால், மலையப்ப சுவாமிக்கு மீண்டும் தங்கக்கவசம் பொருத்தப்பட்டது.  திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  தினமும் உற்சவ மூர்த்திகளான தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது. இதனால், உற்சவர் சிலைக்கு சேதம் ஏற்படாமல் இருக்கும் விதமாக சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க கவசம் அகற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த உற்சவத்தை   ஜேஷ்டாபிஷேகம் என்கின்றனர். இந்த உற்சவம் ஒவ்வொரு  ஆண்டும் தெலுங்கில் வரும் ஜேஷ்டமாதத்தில் பவுர்ணமியன்று நிறைவு பெறும் விதமாக நடைபெறும்.

Advertising
Advertising

அதன்படி, இந்தாண்டு கடந்த 4ம் தேதி ஜேஷ்டாபிஷேகம் தொடங்கியது. முதல் நாளில் தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க கவசங்கள் அகற்றப்பட்டு பஞ்சலோக சிலைகள் சேதம் ஏற்படாமல் இருக்க மூலிகை திரவியங்களால் ரங்கநாதர் மண்டபத்தில்  சிறப்பு யாகமும், அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்படி, முதல் வைர கவசமும், 2வது நாள் முத்து கவசமும் அணிவிக்கப்பட்டது. மூன்றாவது நாளான நேற்று பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்ட மூலிகை திரவியங்களால் கோயில் ஜீயர்கள் முன்னிலையில் தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர் வேத மந்திரங்கள் முழங்க தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து  உற்சவர்களுக்கு மீண்டும் தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, செயல் அலுவலர் அனில் குமார் சிங்கால், கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி, துணை செயல் அலுவலர் ஹரிந்திரநாத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  இந்த தங்க கவசம்  அடுத்த ஆண்டு ஜேஷ்டாபிஷேகம் வரை தொடர்ந்து அப்படியே அணிவிக்கப்பட்டு அபிஷேகம், பூஜைகள் நடைபெறும்.

Related Stories: