ஊழல்களை எதிர்த்து போராடியதால் கைதான திமுகவினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை:  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:  உள்ளாட்சித் துறை அமைச்சராக மட்டுமல்லாமல் தன்னை சூப்பர் முதலமைச்சரை போல நினைத்துக் கொண்டு செயல்பட்டு வருபவர் அமைச்சர் வேலுமணி. கொரோனா காலத்திலும் தனது கொள்ளைகளை நிறுத்தாமல் தொடரும் வேலுமணியின் வேலைகளை திமுகவின் கோவை மாவட்டச் செயல் வீரர்கள் தொடர்ந்து மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறார்கள். இதற்கு முறையாகப் பதில் சொல்ல வக்கற்ற வேலுமணி, திமுகவினரை கைது செய்து சிறைச்சாலைகளைத் தனது சதி வலைக்குப் பயன்படுத்தி வருகிறார்.  கொரோனா நோய்த் தொற்றால் தலைநகர் சென்னையே பீடிக்கப்பட மிக முக்கியமான காரணம் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கையாலாகாத்தனம். வேலுமணியின் மிக மோசமான நிர்வாகத்தின் அடையாளம் தான் சுமார் 18 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதும், தினமும் ஆயிரம் பேர் பாதிக்கப்படுவதும், 150 உயிர்கள் இறந்ததும்.

Advertising
Advertising

இதைப் பற்றிய வெட்கமோ, கூச்ச உணர்வோ இல்லாமல் கொள்ளையடிப்பதிலும் அதனை அம்பலப்படுத்துபவர்களைக் கைது செய்வதிலும், இந்தச் செய்திகளை வரவிடாமல் தடுப்பதிலும், மீறிச் செய்தி வெளியிடுபவர்களை மிரட்டுவதிலும் வேலுமணியின் மொத்த நேரமும் போய்க்கொண்டு இருக்கிறது. மக்கள் மன்றத்தில் இதனைக் கண்டிக்க திமுக முடிவெடுத்தது. ஜூன் 5ம் தேதி கோவையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தத் திட்டமிட்டோம். கோவை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் சி.ஆர்.இராமச்சந்திரன், கோவை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் மு.முத்துசாமி ஆகிய மூவரது ஏற்பாட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து முடிந்துள்ளது. ஆனாலும் வேலுமணியின் போலீசார், ஆயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்களைக் கைது செய்துள்ளார்கள். பொய் வழக்குப் போட்டு கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வதோடு, அவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். இதே போக்கு தொடருமானால், வேலுமணியின் 3 ஆயிரம் கோடி ஊழலைப் பட்டியலிட்டு மாபெரும் போராட்டத்தைக் கோவையில் நடத்துவோம் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: