இந்தியாவுக்குள் சீன ராணுவம் நுழையவில்லை என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த முடியுமா?.. ராகுல்காந்தி கேள்வி

டெல்லி: இந்திய லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கடந்த மாதம் முதல் வாரத்தில் கைகலப்பும், மோதலும் ஏற்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தில் சீனா தனது கடற்படை தளத்தை வேகமாக வலுப்படுத்துகிறது என்பதை சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்தியுள்ளது. இதனிடையே மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் சீன துருப்புகள் கிழக்கு லடாக் பகுதிக்கு நகர்ந்துள்ளதாகவும் இந்தியா தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டர் பதிவில் கூறுகையில், இந்திய எல்லைக்குள் எந்த ஒரு சீன ராணுவ வீரரும் நுழையவில்லை என்பதை மத்திய அரசு உறுதி செய்ய முடியுமா? எல்லையில் என்ன தான் நடக்கிறது? மவுனம் நிச்சயமின்மைக்கும் யூகங்களுக்குமே வழிவகுக்க கூடியதாக உள்ளது. லடாக் எல்லை சூழ்நிலை குறித்து அரசின் இந்த மவுனம் பெரிய சந்தேகத்திற்கே வழிவகுக்கிறது. மேலும் நெருக்கடி காலத்தில் நிச்சயமற்ற நிலையையும் உருவாக்குகிறது என பதிவிட்டுள்ளார். ஜூன் 6-ம் தேதி கிழக்கு லடாக் பகுதி பிரச்சினையைத் தீர்க்க இந்தியாவும் சீனாவும் உயர்மட்ட ராணுவ சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ள அறிக்கை ஒன்றையும் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.

இந்தியாவும் சீனாவும் ஜூன் 6 ம் தேதி கிழக்கு லடாக்கில் நடந்து வரும் சர்ச்சையை தீர்க்க சீனாவின் உண்மையான கட்டுப்பாட்டு வரிசையில் லெப்டினன்ட் பொது அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளன. 14 கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் சீனப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு உள்ளார் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளது.

Related Stories: