குஜராத் உயர் நீதிமன்றத்தில் அதிரடி கொரோனா வழக்கு விசாரித்த நீதிபதிகள் மாற்றம்: அரசை விமர்சித்ததால் நடவடிக்கை என சர்ச்சை

அகமதாபாத்: குஜராத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அலட்சியமாக செயல்பட்ட அரசு மருத்துவமனையை கடுமையாக விமர்சித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், அதிரடியாக வேறு அமர்வுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.  குஜராத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. இங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்க, மாநில அரசு சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என இம்மாநில உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மேலும், அகமதாபாத் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படுவதில்லை ;அலட்சியமாக செயல்படுவதாகதகவல்கள் வெளியாகின. இதை நீதிபதி பர்திவாலா தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்தது.

 மேலும், இந்த வழக்கை கடந்த மாதம் 11ம் தேதி முதல் நீதிபதிகள் பர்திவாலா, இலேஷ் வோரா அமர்வு விசாரித்து வந்தது. கடந்த 25ம் தேதி நடந்த விசாரணையின்போது, ‘அகமதாபாத் அரசு மருத்துவமனை ஒரு இருட்டறை,’ என்று நீதிபதிகள் விமர்சித்தனர். இந்நிலையில், நீதிபதி பர்திவாலா அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்த கொரோனா தொடர்பான அனைத்து பொதுநல வழக்குகளும், வேறு அமர்வுக்கு மாற்றப்படுவதாக சில நாள் முன் திடீரென அறிவிக்கப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தையும் தலைமை நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு விசாரிக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால், நீதிபதிகள் அமர்வை மாற்றினால் வழக்கு விசாரணையின் தொடர்ச்சி பாதிக்கப்படும் என வழக்கறிஞர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், கொரோனா வழக்கு விசாரணை அமர்வில் இடம் பெற்ற  நீதிபதிகள் பர்திவாலாவும், இலேஷ் வோராவும் நேற்று அதிரடியாக வேறு அமர்வுகளுக்கு மாற்றப்பட்டனர்.  இதன்படி, தலைமை நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வுக்கு நீதிபதி பர்திவாலாவும், நீதிபதி சாயா தலைமையிலான மற்றொரு அமர்வுக்கு நீதிபதி இலேஷ் வோரா மாற்றப்பட்டனர். குஜராத் நீதிமன்றத்தில் நடந்த இந்த மாற்றங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories: