நிர்மலா சீதாராமனுக்கு ஆப்பு மத்திய நிதியமைச்சராகிறார் கே.வி.காமத்?: மோடி திட்டம் பற்றி பரபரப்பு தகவல்

புதுடெல்லி: பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தேசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் பதவியை நேற்று ராஜினாமா செய்த கே.வி.காமத், நிர்மலா சீதாராமனுக்கு பதிலாக நாட்டின் புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. பிரிக்ஸ் எனப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளும் இணைந்து, தேசிய வளர்ச்சி வங்கியைத் தொடங்கின. அதன்படி, பிரிக்ஸ் அமைப்பின் தலைநகரான சீனாவின் ஷாங்காயில் தொடங்கப்பட்ட அந்த வங்கியின், முதல் தலைவரை நியமிக்கும் உரிமை இந்தியாவுக்கு கிடைத்தது.

இதையடுத்து, ஐசிஐசிஐ-யின் தலைவராக இருந்த கே.வி.காமத் கடந்த 2015ல் இவ்வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், 5 ஆண்டு காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து இப்பதவியில் இருந்து நேற்று அவர் ராஜினாமா செய்தார். பிரேசில் நாட்டை சேர்ந்த மார்கோஸ் ட்ராய்ஜோ புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவை சேர்ந்த அனில் கிஷோரா வங்கியின் துணைத் தலைவராகவும், தலைமை பேரிடர் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

காமத்தின் பதவி காலத்தில்தான் ஐந்து உறுப்பினர் நாடுகளுக்கும் கொரோனா தொற்றில் இருந்து விடுபட ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி அளிக்கப்பட்டது. இந்தியாவுக்கும் அதன் பங்கான ரூ 7,535 கோடி நிதி கிடைத்தது. இந்நிலையில், காமத்தின் திடீர் ராஜினாமாவுக்கு வேறு காரணம் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது, மத்திய நிதியமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமனுக்கு பதிலாக, காமத்தை நிதியமைச்சராக்க பிரதமர் மோடி விரும்புவதாக தெரிகிறது. அதன் காரணமாகவே, காமத் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. இது, மத்திய அரசு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories: