அரிமளம் அருகே எலி கொல்லி மருந்தை தின்ற 13 மயில்கள் பலி: விவசாயி கைது

திருமயம்: அரிமளம் அருகே விவசாய நிலத்தில் புகுந்து சேதப்படுத்தும் எலிகளை கொல்ல வைத்த பூச்சி மருந்தை தின்ற 13 மயில்கள் பரிதாபமாக இறந்தன. விஷம் வைத்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே சத்திரம் அழிஞ்சி கண்மாய் பகுதியில் ஒரு பெண் மயில் உட்பட 13 மயில்கள் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் ஆனந்தகுமார் விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரனையில் அழிஞ்சி கண்மாய் கரையை ஒட்டியுள்ள பகுதியில் சீகம்பட்டியை சேர்ந்த காசிநாதன் என்பவர் விவசாயம் செய்து வருகிறார்.

இந்நிலையில் விவசாய பயிர்களை எலிகள் நாசம் செய்வதால் எலிகளை கொல்வதற்காக விஷம் கலந்து உணவு வைத்ததாகவும் அதனை மயில்கள் சாப்பிட்டதால் இறந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து விஷம் கலந்த உணவை வைத்த காசிநாதனை நேற்று போலீசார் கைது செய்து திருமயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி 15 காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து காசிநாதனை போலீசார் அறந்தாங்கி கிளை சிறையில் அடைத்தனர். மேலும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்தனர்.

Related Stories: