இன்னும் 3 நாளில் முடிகிறது 4-ம் கட்ட ஊரடங்கு; மீண்டும் நீட்டிப்பு குறித்து வரும் 31-ல் மன் கீ பாத்தில் பிரதமர் மோடி அறிவிக்கவுள்ளதாக தகவல்...!

டெல்லி: வரும் நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் 2 வாரம் நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், 5-ம் கட்ட ஊரடங்கு குறித்த அறிவிப்பை இந்த வாரம் மன் கீ பாத் நிகழ்ச்சியின்போது, பிரதமர் மோடி தெரிவிக்கவுள்ளதாக  தகவல்வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதுவரை 4 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் படி, லாக் டவுன்  4.0 வருகிற மே 31ம் தேதி நிறைவடைகிறது. 4 நாட்களில் நான்காம் கட்ட ஊரடங்கு முடிய உள்ள நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இதனால், 5-ம் கட்ட ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. ஊரடங்கு காலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து மாநில அரசுகள் அறிக்கை அளிக்க மத்திய அரசு  அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, 5ம் கட்ட ஊரடங்கு நீட்டிப்புக்கு முன் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி பேச திட்டம் ஏதும் இல்லை என்றும் கூறப்படுகிறது. முதல்வர்கள் தரும் அறிக்கைகளின் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பு  குறித்து முடிவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே, இந்தியாவின் மெட்ரோ நகரங்களான டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, கொல்கத்தா மற்றும் முக்கிய நகரங்களான அகமதாபாத், புனே, தானே, ஜெய்ப்பூர் மற்றும் இந்தூர் ஆகிய நகரங்களில் அதிகளவு கொரோனா பாதிப்பு  பதிவாகியுள்ளது. மேற்கண்ட நகரங்களில் புதிய கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்தியாவின் ஒட்டுமொத்த பாதிப்பில் 70 சதவிகிதம் மேற்கண்ட 11 நகரங்களில் உறுதியாகியுள்ளது. எனவே, இந்தக் குறிப்பிடப்பட்ட நகரங்களில் ஊரடங்கில் சில தளர்வுகளுடன் நீடிக்கப்படுவது குறித்து வரும் 31-ம் தேதி மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது.

Related Stories: