துப்பாக்கிச்சூடு 2ம் ஆண்டு நினைவுதினம் தூத்துக்குடியில் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி: ஆயிரக்கணக்கான போலீசார் குவிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் 2ம் ஆண்டு நினைவாக நேற்று பல்வேறு அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018ம் ஆண்டு மே 22ம்தேதி கலெக்டர் அலுவலம் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது நடந்த கலவரத்தால் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 15 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தின் 2ம் ஆண்டு நினைவுதினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் பொது அஞ்சலிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கல்லறை தோட்டத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். பல்வேறு வீடுகளிலும் தனித்தனியாக இறந்தவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Advertising
Advertising

மேலும் அ.குமரெட்டியபுரம், பண்டாரம்பட்டி, தெற்குவீரபாண்டியபுரம், மடத்தூர், திரேஸ்புரம், பாத்திமாநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உயிரிழந்தவர்களின் படங்கள் அலங்கரித்து வைத்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அஞ்சலி செலுத்தினர். தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையில் பலர்  மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதேபோல், மார்க்சிஸ்ட், மதிமுக, அமமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. துப்பாக்கிச்சூடு நினைவு தினத்தையொட்டி எஸ்பி அருண்பாலகோபாலன் தலைமையில், 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நகரில் 4 பேருக்கு மேல் கூடவும், தனி நிகழ்ச்சிகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. நகரின் முக்கிய சந்திப்புகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: