பத்திரிகை துறையின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்: பிரதமரிடம் வலியுறுத்துவதாக ஜி.கே.வாசன், திருமாவளவன் அறிவிப்பு

சென்னை: பத்திரிகை துறையின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்றும், இதுசம்பந்தமாக பிரதமரிடம் வலியுறுத்துவோம் என ஜி.கே.வாசன், திருமாவளவன் தெரிவித்துள்ளனர்.  பத்திரிகை துறைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசனை, ‘தி இந்து’ குழும இயக்குநர் என்.ராம், தினகரன் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், தினமலர் கோவை பதிப்பு வெளியீட்டாளர் ஆதிமூலம் ஆகியோர் நேற்று சந்தித்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய, மாநில அரசுகளுக்கும், மக்களுக்கும் இணைப்புச் சங்கிலியாக செயல்படுகின்ற, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற துறை பத்திரிகை துறை.

ஊரடங்கை அமல்படுத்திக்கொண்டிருக்கிற இச்சூழலில் பத்திரிகை துறை பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. பத்திரிகை துறை எதிர்கொண்டு வரும் பெரும் பிரச்னைகளிலிருந்து அதனை விடுவிக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை. நான் எம்பியாக அடுத்த மாதம் டெல்லிக்கு செல்லும் போது, பிரதமரை நேரில் சந்தித்து தமிழகத்தின் பிரதான கோரிக்கைகளில், பத்திரிகை துறை சார்ந்த கோரிக்கையை முதன்மையான கோரிக்கையாக கொடுத்து நிறைவேற்ற வலியுறுத்துவேன். மேலும் தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கு பத்திரிகை துறையின் கோரிக்கைகளை அனுப்பி வைத்து நிறைவேற்ற வலியுறுத்துவேன்.

பத்திரிகை நிறுவனங்களின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்றி பத்திரிகை துறை தொடர்ந்து லாபகரமாக இயங்க உதவிட வேண்டும்.

 இவ்வாறு அவர் கூறினார். இதேபோல், பத்திரிகை துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை, ‘தி இந்து’ குழும இயக்குநர் என்.ராம், தினகரன் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், தினமலர் கோவை பதிப்பு வெளியீட்டாளர் ஆதிமூலம் ஆகியோர் அசோக் நகர் அம்பேத்கர் திடலில் நேற்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  அரசு விளம்பரங்கள் தொடர்பாக, மத்திய, மாநில அரசுகள் வைத்துள்ள நிலுவைத் தொகைகளை உடனே வழங்க வேண்டும்.

அரசு விளம்பரக் கட்டணத்தை 100 சதவீதம் உயர்த்தி தர வேண்டும். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு முழுமையாக வரிவிலக்கு அளிக்க வேண்டும். இந்த கோரிக்கைகள் ஜனநாயகப்பூர்வமானவை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அச்சு ஊடகத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் கடிதம் அளிக்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>