பத்திரிகை நிறுவனங்களின் நெருக்கடி குறித்து பிரதமர் மோடியின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுதி

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் நேற்று சந்தித்து பேசினர்.  இது குறித்து கட்சி தலைமை வெளியிட்ட அறிக்கை:  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் ஆகியோரை பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் இந்து என்.ராம், தினகரன் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், தினமலர் ஆதிமூலம் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

ஊரடங்கால் அச்சு ஊடகங்களான நாளிதழ்கள் உள்ளிட்ட பத்திரிகைகள் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருவது குறித்தும், அதிலிருந்து மீள்வதற்கு அரசு செய்ய வேண்டியவைகள் குறித்தும் எடுத்துரைத்தனர். மத்திய அரசு, பத்திரிகை அச்சுக் காகிதம் மீதான வரியைக் குறைக்க வேண்டும். அரசு விளம்பரங்கள் தொடர்பாக மத்திய - மாநில அரசுகள் வைத்துள்ள நிலுவைத் தொகைகளை உடனடியாக பத்திரிகைகளுக்கு வழங்க வேண்டும். நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அரசு விளம்பரக் கட்டணத்தை நூறு விழுக்காடு உயர்த்தி வழங்க வேண்டும். அடுத்து 2 ஆண்டுகளுக்கு முழுமையாக வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமருக்கு அளித்திருப்பதையும் தெரிவித்தனர்.

இந்தக் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்த வேண்டுமென்றும், அச்சு ஊடகங்கள் மக்களின் குரலாக செயல்படுவதற்குத் துணை நிற்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர். இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் பிரதமரின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டுமென கோரினர். இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் மிகவும் நியாயமானவை. ஜனநாயக நாட்டில் பத்திரிகைத்துறை மற்றும் ஊடகங்கள் மிகவும் கேந்திரமான பங்கு வகிப்பவை. மக்களது பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் பெரும் கருவியாக விளங்கி வருகின்றன. கொரோனா கொடுமையால் பொது முடக்கத்திற்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு பெரும் விழிப்புணர்வை அளிப்பதில் அச்சு ஊடகங்களின் பங்கு மகத்தானது. நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பத்திரிகைத் துறையினை பாதுகாப்பது சமூக நோக்கிலும் அத்தியாவசியமானதாகும்.

அச்சு ஊடகங்கள் செயல்பட குறைந்தபட்சம் அரசு செய்ய வேண்டிய கோரிக்கைகள்தான் இவை. ஊடகங்களின் கருத்து சுதந்திரத்திற்கும், நடுநிலைத் தன்மையோடு செயல்படுவதற்கும் எப்போதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை நின்று வருகிறது. அச்சு ஊடகங்களின் கோரிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மூலமும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமும் பிரதமர் நரேந்திர மோடி கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றிட நடவடிக்கை எடுப்பதாகவும் மாநிலத் தலைவர்கள் தெரிவித்தனர். இவ்வாறு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: