சலூன் கடைகளில் வெட்டிய முடியை வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும்: கேரளாவில் புது முடிவு

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள சலூன் கடையில் முடிவெட்டியவர்கள் தங்களது முடியை வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் கடந்த 2 மாதமாக சலூன் கடைகள், அழகு நிலையங்கள் மூடப்பட்டிருந்தது. இதனால் முடி வெட்ட முடியாமலும் ஷேவிங் செய்ய முடியாமலும் மக்கள் தவித்தனர். பலரும் நீண்ட தாடி மற்றும் முடிகளுடன் வலம் வருகின்றனர். பெண்களும் அழகு நிலையங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இந்த நிலையில் கொரோனா தீவிரம் குறைந்துள்ள பகுதிகளில் நிபந்தனைகளுடன் சலூன் கடை, அழகு நிலையங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் இன்றுமுதல் சலூன் கடை, அழகு நிலையங்கள் திறக்கப்பட்டன. சலூன் கடைகளில் முடி வெட்டவும் ேஷவிங் செய்ய மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. 2 பேருக்கு மேல் காத்திருக்கக்கூடாது எனவும் ஒருவருக்கு பயன்படுத்திய டவலை பலருக்கு பயன்படுத்தக்கூடாது எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கேரள சலூன் கடை மற்றும் அழகு நிலைய கூட்டமைப்பு தலைவர் மோகனன் மற்றும் செயலாளர் கூறியதாவது: வெட்டப்பட்ட முடியை வாடிக்கையாளர்கள் எடுத்து செல்ல வேண்டும். வீட்டில் இருந்து சுத்தமான துணி மற்றும் டவல் கொண்டு வர வேண்டும். கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

காய்ச்சல், இருமல், ஜலதோஷம் உட்பட நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் கடையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அறிமுகம் இல்லாதவர்களும் கடைகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வாடிக்கையாளர்கள் தூய்மையை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Related Stories: