ஊரே கொரோனாவால் பீதியடைந்துள்ள நிலையில் ‘சமோசா பார்ட்டி’ வைத்து கலக்கல் ஆட்டம், பாட்டம்: அபார்ட்மென்ட் தலைவர் உட்பட 2 பேர் கைது

மும்பை: மும்பை நகரமே கொரோனாவினால் பீதியடைந்துள்ள நிலையில் ‘சமோசா பார்ட்டி’ வைத்து ஆட்டம் போட்ட விவகாரத்தில், அபார்ட்மென்ட் தலைவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும்நிலையில், நேற்று மும்பையில் 1,411 பேர் புதியதாக  கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மும்பையில் மட்டும் கொரோனா தொற்று பாதிப்புகள் 22,563 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 800 பேர் இறந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கு ஆகியவற்றின் மத்தியில், சிலர் அலட்சியமாக செயல்பட்டு வருவதால் தொற்று பரவல் குறையவில்லை.

இந்நிலையில் மும்பை நகரின் கட்கோபரில் அமைந்துள்ள அபார்ட்மென்ட்டை சேர்ந்த சங்கத்தினர் ‘சமோசா பார்ட்டி’க்கு ஏற்பாடு செய்தனர். அவர்கள் சமோசாவுடன் இசை மற்றும் நடனம் ஏற்பாடு செய்திருந்தனர். 30க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி அவர்களின் அபார்ட்மெண்ட் பகுதியில் இசை, நடனம் என்று ஆட்டம் பாட்டத்துடன் சமோசா விருந்து வைத்து கொண்டாடினர். இதன் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால், அதிர்ச்சியடைந்த போலீசார் சம்பந்தப்பட்ட அபார்ட்மென்டுக்கு சென்று சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த இரண்டு பேரை கைது செய்தனர்.

அவர்களில் ஒருவர் அபார்ட்மென்ட் தலைவர் ராகுல் சிங்வி மற்றும் நிர்வாகி ஜெதலால் தேதியா ஆகியோர் ஆவர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘சமோசா விருந்தில், யாரும் முக கவசம் அணியவில்லை. சமூக இடைவெளியை பின்பற்றவில்லை. ஊரடங்கை மீறி செயல்பட்டதால், 2 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஐபிசியின் 188 மற்றும் 269 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றனர்.

Related Stories: