நீர்நிலைகள் தூர்வாரப்பட்டதால் ஒன்றரை லட்சம் ஏக்கர் விவசாய நிலம் அதிகரிப்பு: மாவட்ட கலெக்டர் தகவல்

காரைக்குடி:  மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் தூர்வாரப்பட்டதால் ஒன்றரை லட்சம் ஏக்கர் விவசாய நிலம் சாகுபடி பரப்பாக மாறி உள்ளது என கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார். காரைக்குடி அருகே ஓ.சிறுவயல் முதல் குன்றக்குடி சாலையில் உள்ள தேனாறு 100 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதனை கலெக்டர் ஜெயகாந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், சிவகங்கை மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 540 கண்மாய்களும், ஒன்றிய கண்மாய்கள் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டவகைகளும் உள்ளன. தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்த குடிமராமத்து திட்டத்தின் கீழ் இம்மாவட்டத்துக்கு 36 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் பொதுப்பணி த்துறை கண்மாய் 300, ஒன்றிய கண்மாய்கள் 5000க்கும் மேற்பட்டவைகள் தூர்வாரப்பட்டுள்ளது.

தவிர நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள குளம், கண்மாய்கள் தூர்வாரி மேம்படுத்தப்பட்டுள்ளது. வரத்து கால்வாய்கள் தூர்வரப்பட்டதால் அனைத்து நீர் நிலைகளிலும் தற்போது தண்ணீர் உள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு தரிசாக கிடந்த ஒன்றரை லட்சம் ஏக்கர் நிலம் விவசாய நிலமாக மாற்றறப்பட்டு நெல் உள்பட பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. நீர் நிலைகளை பாதுகாத்தால் தான் மாவட்டம் வளம் பெறும் என்ற அடிப்படையில் தூர்வாரப்பட்டாமல் கிடக்கும் நீர்நிலைகளை மேம்படுத்துவதற்கு என தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் 20 மண் அள்ளும் இயந்திரங்கள் வாங்கப்பட்டு இப்பணிக்கு என பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு கிராமப்புற மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. நீர்நிலைகளின் எல்லைகள் கண்டுபிடிக்க என பல்வேறு வகைகளில் கிராம மக்களே முன்வந்து உதவி வருகின்றனர். மாவட்டத்தில் 50 கிலோ மீட்டருக்கு மேல் வைகை ஆறு செல்கிறது. இதில் இருந்து முட்புதர்கள் 30 கிலோ மீட்டருக்கு மேல் அகற்றப்பட்டுள்ளது.

மழை துவங்குவதற்கு முன்பு அனைத்து நீர்நிலைகளும் தூர்வரப்படும். இந்த ஆண்டு குடிமராமத்து பணிக்கு என 27 கோடி அரசு ஒதுக்கி உள்ளது. தவிர உள்ளாட்சிக்கு என சிறப்பு நிதி ஒதுக்கப்படும். இதன் மூலம் எஞ்சிய கண்மாய், குளங்கள் தூர்வரப்படும். காரைக்குடி பகுதியில் உள்ள தேனாறு முழுவதும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். நீர்நிலைகளை மேம்படுத்துவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றார். மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி, சித்தமருத்துவர் சொக்கலிங்கம், ரவி, ஊராட்சி தலைவர் குழந்தைவேல் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories: