உலகம் முழுவதும் 2.8 கோடி ஆபரேஷன் ரத்து: மன அழுத்தத்தால் மடியும் நோயாளிகள்

லண்டன்: உலகம் முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, எண்ணற்ற மருத்துவமனைகள் சிறப்பு மையமாக மாற்றப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு இடங்களில் பணியாற்றும் டாக்டர்களும் கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, இந்த மருத்துவமனைகளில் ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்த அறுவை சிகிச்சைகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், உலகம் முழுவதும் இதுவரை 2.8 கோடி அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டோ, தள்ளி வைக்கப்பட்டோ இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மொத்தம் 120 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 71 நாடுகளில் உள்ள 359 மருத்துவமனைகளில் ரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ள அறுவை சிகிச்சைகளின் முழு தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும், 190 நாடுகளில் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, கடந்த 3 மாதங்களாக கொரோனா பாதிப்பால் மருத்துவ துறையில் பல இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ‘இந்த நெருக்கடியால், பிற நோயாளிகள் தங்களின் நோய் தீர நீண்ட காலம் காத்திருக்க நேரிடும். இது அவர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி, மரணத்தையும் விளைவிக்கும்,’ என ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

* புற்றுநோய் அல்லாத அறுவை சிகிச்சைகள்தான் மிக அதிகளவில் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

* எலும்பியல் அறுவை சிகிச்சைகள் மட்டுமே 63 லட்சம் ரத்து செய்யப்பட்டுள்ளன.

* 23 லட்சம் புற்றுநோய் நோயாளிகளின் அறுவை சிகிச்சையும் ரத்து செய்தோ, தள்ளி வைக்கப்பட்டோ உள்ளன.

* வரும் வாரங்களில் மேலும் 24 லட்சம் அறுவை சிகிச்சைகளை தள்ளி வைக்க வாய்ப்புகள் உள்ளன.

* இங்கிலாந்தின் பர்மிங்காம் பல்கலை மருத்துவமனையில் வாரந்தோறும் 43 ஆயிரம் அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்படுகின்றன.

சென்னையிலும்...

இந்த ஆய்வு சென்னையிலும் நடத்தப்பட்டுள்ளது. அதில், ‘சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தினமும் 100-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்யப்படுவது வழக்கம். இப்போது, சொற்ப அளவிலேயே நடக்கிறது,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: