டாஸ்மாக் திறப்பிற்கு திமுகக் கூட்டணிக்கட்சியினர் எதிர்ப்பு; கையில் கருப்பு கொடியேந்தி தனது குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டார் மு.க.ஸ்டாலின்

சென்னை: கொரோனா பாதிப்பை  தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 3ம் தேதியுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு உத்தரவை, மே 17ம் தேதி வரை மீண்டும் மத்திய அரசு நீட்டித்துள்ளது. இருப்பினும் முடி வெட்டும் கடை, அழகு நிலையங்கள் உள்ளிட்டவற்றைத் தவிர பிற தனிக் கடைகள் திறக்கலாம் என அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மற்ற மாநிலங்களில் டாஸ்மாக் கடைகள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன. தொடர்ந்து, தமிழகத்திலும், இன்று முதல் டாஸ்மாக் கடைகளை கட்டுப்பாட்டுடன் திறக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, திடீரென மதுபானக் கடைகளைத் திறப்பதில் மட்டும் ஆர்வத்துடன் செயல்படும் தமிழக அரசை கண்டிக்கும் வகையிலும் மாநில அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்காததை கண்டித்தும் மே 7-ம் தேதி ஒருநாள் மட்டும் கருப்புச் சின்னம் அணிவது என்றும் அன்று காலை 10 மணிக்கு அவரவர் இல்லத்தின் முன் ஐந்து பேருக்கு அதிகமாகாமல் பதினைந்து நிமிடங்கள் நின்று, “கொரோனாவை ஒழிப்பதில் தோல்வி அடைந்துவிட்ட அதிமுக அரசைக் கண்டிக்கிறோம்” என முழக்கமிட்டுக் கலைவதென்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அதன் கூட்டணிக் கட்சித் தலைவவர்கள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். அதன்படி, பொதுமக்கள் தங்கள் வீட்டின் முன் கருப்பு கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனைபோல், திமுக தலைவர் இன்று மு.க.ஸ்டாலின் தனது ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் கருப்பு உடையணிந்து, கையில் கருப்பு கொடியேந்தி மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பினார். அவருடன் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து இந்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.

Related Stories: