செல்லப் பிராணிகள் உயிருக்கும் உலை

பெரும்பாலான வீடுகளில் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகள் வளர்க்கப்படுகின்றன. இவற்றை தங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாகவே பராமரிப்பவர்கள் அதிகம். இவற்றை ஒருநாள் பார்க்கவில்லை என்றாலும் கூட, பைத்தியம் போல் பிதற்றும் பாசக்கார மக்களும் உள்ளனர். பணக்காரர்களின் வீடுகளில் இவற்றை வளர்க்க தனி பட்ஜெட், தனி டாக்டர் என மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை செலவிடப்படுகிறது. நடுத்தர வர்க்கத்தினர் வீடுகள் என்றால், பெடிகிரி கிடைக்கும். அது தவிர, வாரந்தோறும் வாங்கப்படும் சிக்கன், மட்டன், பிஷ்களில் ஒரு பங்கு அளிக்கப்படுகிறது. ஏழைகள் வீடுகளில் இவை சுதந்திரமாகவே இருக்கும். நினைக்கும் நேரத்தில் வெளியே போகலாம். வரலாம். ஆனால், நடுத்தர மக்கள், பணக்காரர்கள் வீடுகளில் வளர்க்கப்படும் நாய், பூனைகளுக்கு இந்த சுதந்திரம் கிடையாது.

Advertising
Advertising

ஒன்று, வீட்டு காம்பவுண்டுக்குள் சுற்றி வரலாம் அல்லது அதற்கென கட்டப்படும் கூண்டுக்குள் இருக்கலாம். இது, குறிப்பிட்ட சதவீதம்தான். பெரும்பாலான நாய்கள் சங்கிலியால் கட்டப்பட்டுதான் கிடக்கும். இப்படிப்பட்ட நாய்களின் உயிருக்கும் உலை வைத்துள்ளது கொரோனா.

சங்கிலியில் கட்டி வளர்க்கப்படும் நாய்களை வழக்கமாக, அதன் உரிமையாளர்கள் காலை, மாலையில் காலார நடக்க வைத்து அழைத்துச் செல்வது உண்டு. அப்போது அவை தனது இயற்கை உபாதைகளை சுதந்திரமாக கழித்து விடும். கூடவே, மண்ணை காலால் கீறி தூற்றுவது, விளையாடுவது என பல்வேறு உடற்பயிற்சிகளையும் செய்து விடும்.  இதன் மூலம், பல மணி நேரம் கட்டிப் போடப்பட்டு இருந்த சோகத்தை சிறிது நேரத்தில் மறந்து உற்சாகமாகிவிடும். அதன் மனநிலை குஷி மூடுக்கு வந்து விடும்.

கொரோனா ஊரடங்கு காரணமாக, நாய்களின் இந்த சுதந்திரம் பறிபோய் இருக்கிறது. காரணம், பெரும்பாலான உரிமையாளர்கள் ஊரடங்கு பயத்தாலும், பாதுகாப்பின்றி வெளியே போனால் கொரோனா தாக்கி விடும் என்ற அச்சத்தாலும், நாயை வெளியே அழைத்துச் செல்வது கிடையாது. இதனால், அவை கட்டப்பட்ட இடத்திலேயே பல நாட்கள் இருக்கின்றன. இயற்கை உபாதைகளையும் கட்டாயத்தின் பேரில் அங்கேயே முடித்து விடுகின்றன. அவற்றின் நிலையை பார்த்து உரிமையாளர்கள் வேதனைபடுகின்றனரே தவிர, வெளியே அழைத்துச் செல்லும் துணிவின்றி இருக்கின்றனர்.

இதன் காரணமாக, நாய்களுக்கு அஜீரணம் ஏற்பட்டு, அதன் உடல்நிலை பாதித்து, நாளடைவில் அவற்றின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுவதாக கால்நடை டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், பல நாட்கள் ஒரே இடத்தில் கட்டிப் போடப்பட்டு இருப்பதால் அதன் மனநிலையும் பாதிக்கும் அபாயமும் இருப்பதாக எச்சரித்துள்ளனர். ‘சில நிமிடங்கள் அவற்றை வெளியே அழைத்துச் சென்று வருவதால் எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது. எனவே, செல்லப் பிராணிகளின் மீதும் சிறிது கனிவு காட்டுங்கள்,’ என்கின்றனர் அவர்கள்.

Related Stories: