கொச்சியில் இதய ஆப்ரேஷன் குழந்தையை காப்பாற்றுவதற்காக திறக்கப்பட்ட மாநில எல்லைகள்

நாகர்கோவில்: பிறந்ததும் உடல் நீல நிறமாக மாறியதால் நாகர்கோவிலில் இருந்து குழந்தையை ஆம்புலன்சில் கேரள மாநிலம் கொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்காக மாநில எல்லைகள் திறக்கப்பட்டது. நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு தனியார் மருத்துவமனையில்  கடந்த 14ம் தேதி பிரசவம் நடந்தது. குழந்தை பிறந்ததும் அதன் உடல் முழுவதும் நீல நிறமாக மாறியது. எனவே, கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையை தொடர்பு கொண்டு ஆப்ரேஷனுக்கு டாக்டர்கள் ஏற்பாடு செய்தனர். ஆனால் ஊரடங்கு வேளை என்பதால் தமிழகத்தில் இருந்து கேரளா செல்வதும் பெரும் சவாலாக இருந்தது. இதனை தொடர்ந்து எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம், கேரள முதல்வரை தொடர்பு கொண்டு பேசியது.

முதல்வர் உடனே, எர்ணாகுளம் கலெக்டர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுக்கொண்டார். அதன்படி, 15ம் தேதி கொச்சியில் இருந்து மதியம் 1.30 மணியளவில் புறப்பட்ட பிரத்யேக ஆம்புலன்ஸ் மாலை 6.30 மணிக்கு நாகர்கோவில் வந்து குழந்தையை ஏற்றிக்கொண்டு  இரவு 10.30 மணிக்கு திரும்பியது. இதற்காக பிரத்யேக இன்குபேட்டரில் குழந்தை கொண்டு செல்லப்பட்டது. மாநில எல்லைகள், மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகள் அனைத்தும் குழந்தையை கொண்டு செல்ல வசதியாக திறக்கப்பட்டது. போலீசார் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். தொடர்ந்து நேற்று முன்தினம் குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. தொடர்ந்து குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கவனித்து வருகின்றனர்.

Related Stories: