கொரோனாவின் இக்கட்டான சூழலில் செங்கல்பட்டு ஐவிசி மையத்தை பயன்படுத்த நடவடிக்கை: தயாநிதி மாறன் எம்பி வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘‘கொரோனா வைரஸ் பரவும் இந்த இக்கட்டான சூழலில், தேவையான சானிடைசர்கள் தயாரிக்கவும், கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவும் செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பு மருந்துகள் தயாரிப்பு மையத்தை தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என மத்திய சென்னை தொகுதி திமுக எம்பி தயாநிதி மாறன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு அனுப்பி கடிதத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் இந்த இக்கட்டான சூழலில், அத்தியாவசிய தேவையாகி உள்ள ஹேண்ட் சானிடைசர்களை அதிகளவில் உற்பத்தி செய்யக் கூடிய திறனும், கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்கான ஆய்வு மேற்கொள்ளக் கூடிய வசதிகளும் கொண்டதாக தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பு மருந்துகள் தயாரிப்பு மைய (ஐவிசி) வளாகம் உள்ளது.

உயிர்காக்கும் மற்றும் செலவு குறைந்த தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்காக, மத்திய அரசின் எச்எல்எல் லைப்கேர் லிமிடெட் நிறுவனம் செங்கல்பட்டில் ஒருங்கிணைந்த தடுப்பூசி மருந்து தயாரிப்பு வளாகத்தை தொடங்கியது. இது, உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக அறிவிக்கப்பட்டது. தற்போது இங்கு, நாடு முழுவதும் எச்எல்எல்  லைப் கேர் நிறுவன  தொழிற்சாலைகளில் பயன்பாட்டிற்கான சானிடைசர் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், பொதுமக்களுக்கு தேவையான சானிடைசர்கள் தயாரிக்கும் திறனை இந்நிறுவனம் கொண்டுள்ளது. மேலும், வைரஸ் சோதனை ஆய்வகத்தையும் கொண்டுள்ளது. முறையான பயிற்சி மற்றும் கிட் ஆகியவற்றை வழங்கினால், கொரோனா மருந்து கண்டுபிடிக்கும் அடிப்படை சோதனைக்கான மையமாக இதை பயன்படுத்தப்படலாம். இந்த விஷயத்தை ஆராய்ந்து மாநில அரசுக்கு ஆலோசனை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு எம்.பி. தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

Related Stories: