மணலியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மருந்து தெளிப்பு பணியில் கர்ப்பிணி பெண் அலுவலர்: பொதுமக்கள் நெகிழ்ச்சி

திருவொற்றியூர்: மணலி மண்டலத்தில் 6 மாத கர்ப்பிணி பெண் அலுவலர் கிருமிநாசினி தெளிப்பு பணியில் ஈடுபடுவது பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள், தூய்மை பணியாளர்களுடன் அந்தந்த பகுதிகளுக்கு சென்று கொரோனா வைரஸ் பாதுகாப்பு தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு கிருமிநாசினி தெளிப்பது, தெருக்களை தூய்மை செய்வது, கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து விசாரிப்பது போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.முதியோர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட அதிகமான வாய்ப்பு இருப்பதால் இவர்களை கவனமாக இருக்க வேண்டும் என்றும் கர்ப்பிணிகள் தங்களுடைய பரிசோதனையை கூட சில நாட்களுக்கு தள்ளிப்போட வேண்டும் அல்லது மருத்துவமனைக்கு பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்றும் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் மணலி மண்டலத்தில் பூச்சியியல் வல்லுனராக பணிபுரியும் மாலதி என்ற அலுவலர் தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர் கர்ப்பிணியாக இருந்த போதும் அதை பொருட்படுத்தாமல் முக கவசம் அணிந்து கொண்டு சக தூய்மை பணி ஊழியர்களுடன் இணைந்து மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று கிருமி நாசினி தெளிப்பது மற்றும் தூய்மை பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.இவரை பார்க்கும் பொதுமக்கள், ‘‘கர்ப்பிணியாக உள்ளீர்களே? நீங்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளக் கூடாதா?’’ என்று மாலதியிடம் பரிவுடன் கேட்கின்றனர். கர்ப்பிணியாக இருந்த போதும் விடுமுறையில் எடுத்துக்கொள்ளாமல் வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் இவரை பொதுமக்கள் பாராட்டினாலும் அவருக்கு இது பாதுகாப்பானது இல்லை என்றே கருதுகின்றனர்.எனவே மாநகராட்சியில் பணிபுரிபவர்களில் கர்ப்பிணிகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் அவர்களை கொரோனா வைரஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதில் இருந்து இருந்து விடுவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: