கொரோனா வைரஸ் குறித்து வதந்தி ஹீலர் பாஸ்கர் உட்பட 2 பேர் கைது: கோவை மத்திய சிறையில் அடைப்பு

கோவை: கோவையில் கொரானா வைரஸ் குறித்து மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் வதந்திய பரப்பியதாக ஹீலர் பாஸ்கர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.   கோவைப்புதூரை சேர்ந்தவர் ஹீலர் பாஸ்கர்(40). இவர் இயற்கை மருத்துவம், வீட்டிலேயே பிரசவம் போன்ற கருத்துகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவார். வீட்டிலேயே பிரசவம் என்று பிரசாரம் செய்ததற்காக கடந்த ஆண்டு இவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில்,  தற்போது, இவர் கொரோனா வைரஸ் குறித்து பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. அந்த வீடியோவில், கொரோனா வைரஸ் தொடர்பாக அச்சத்தை ஏற்படுத்தி மக்கள் தொகையை குறைக்க பார்க்கின்றனர். நோய் பாதிப்பு இல்லாதவர்களைகூட ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று ஊசி போட்டு கொலை செய்ய போகின்றனர். எனவே மேலதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பின்பற்ற சொல்வதை செய்யக்கூடாது. நமக்கு எது சரி என்று படுகிறதோ? அதனை செய்ய வேண்டும் என்று பேசியிருந்தார். மேலும் மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு விதமான சர்ச்சை கருத்துகளை பதிவு செய்து வெளியிட்டிருந்தார்.

இவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கலெக்டர் ராஜாமணியிடம் புகார் மனு அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்த,  ஹீலர் பாஸ்கரை குனியமுத்தூர் போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி மணிகண்டராஜா அவரை ஏப்ரல் 3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து ஹீலர் பாஸ்கர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதேபோல், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாகவும், இருவரும் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் ஒருவர் பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை டாக்டர் ராம் தீபிகா  அளித்த புகாரின்பேரில், பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளராக உள்ள அரவிந்தசாமி(26) என்பவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: