100 நாள் வேலைத்திட்டத்தில் முதியவர்களை இனி அனுமதிக்க கூடாது: தமிழக அரசு அறிவுறுத்தல்

வேலூர்: கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்ட பணியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை பணியமர்த்தக்கூடாது என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.தமிழகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கும்பலாக நடமாடுவதையும், சேருவதையும், கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், திருவிழாக்கள் அனைத்துக்கும் தடை விதித்துள்ளது. அதேபோல் மக்கள் கூடும் வணிக வளாகங்கள், மால்கள், திரையரங்குகள், வர்த்தக வளாகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரக வேலைவாய்ப்புத்திட்டமான மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை பணியில் அமர்த்துவதை தற்காலிகமாக தவிர்க்குமாறு ஊரக வளர்ச்சித்திட்ட அதிகாரிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அரசின் மறுஅறிவிப்பு வரும் வரை இதனை பின்பற்ற வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.  ஏற்கனவே கோடைகாலங்களில் வயதானவர்களுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தில் தனி வழிகாட்டுதல்கள் வழங்கப்படுவதுண்டு.

அதேபோல் இப்போது கொரோனா அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை பணியில் அமர்த்தக்கூடாது என்றும், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதாலும் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: