மதுரை விமான நிலையம், அகதிகள் முகாம் அருகே கொரோனா வார்டு அமைக்க எதிர்ப்பு; மறியல் போராட்டம்: 20 பெண்கள் உட்பட 40 பேர் கைது

திருமங்கலம்: மதுரை விமான நிலையம் அருகே சின்ன உடைப்பு கிராமத்தில், மத்திய கூட்டுறவு மேலாண்மை பயிற்சி மையம் இயங்கி வருகிறது. விமான நிலையத்தில் இருந்து வரும் கொரோனா அறிகுறி உள்ள பயணிகளை, இந்த கூட்டுறவு மேலாண்மை பயிற்சி மையத்திற்கு கொண்டு வந்து சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக இங்கு தற்காலிக படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்ன உடைப்பை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் நேற்று திடீரென திரண்டு, சாலையில் பட்டுப்போன மரங்களை போட்டு மறியலில் ஈடுபட்டனர். மேலும், வார்டு அமைந்துள்ள பகுதிக்கு செல்ல முடியாமல் பள்ளம் தோண்டவும் பொக்லைன் இயந்திரத்தையும் கொண்டு வந்து நிறுத்தினர்.

இதுகுறித்து தகவலறிந்து அவனியாபுரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். வருவாய் கோட்டாட்சியர் கண்ணகி, திருமங்கலம் டிஎஸ்பி ராமலிங்கம் உள்ளிட்டோரும் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டம் நடத்தியவர்கள் ஏற்காததால் 25 பெண்கள் உள்ளிட்ட 40 பேரை கைது செய்து வேன்களில் ஏற்றிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மாலையில் இவர்கள் விடுவிக்கப்பட்டனர். திருமங்கலம் : திருப்பரங்குன்றம் அருகே ஆஸ்டின்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி மற்றும் திருமங்கலம் ஆலம்பட்டியிலுள்ள தனியார் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆஸ்டின்பட்டி தனியார் கல்லூரி உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமையொட்டி அமைந்துள்ளது. இங்கு கொரோனா தடுப்பு மையம் அமைத்து பலரை தங்க வைப்பதற்கு இலங்கை அகதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அருகேயுள்ள மூனாண்டிபட்டி, தோப்பூர் கிராம மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் எனினும் தனியார் கல்லூரிகளில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு தங்களது பணிகளை துவக்கியுள்ளனர்.

Related Stories: