முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்த நடவடிக்கை : முதல்வர் பழனிசாமி விளக்கம்

சென்னை : முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவேண்டும் எனில் பேபி அணையை பலப்படுத்த வேண்டும் என்று கூறினார். இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் பழனிசாமி, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142  அடியாக உயர்த்தியது மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான் என்று குறிப்பிட்டார்.  

நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த பேபி அணையின் முன்னுள்ள மரங்களை அகற்ற வேண்டும் என்றும் ஆனால் கேரள அரசு அதற்கு அனுமதி வழங்கவில்லை என்றும் விளக்கம் அளித்தார். கட்டுமான பொருட்களை கேரள வனப்பகுதிக்குள் எடுத்துச் செல்ல கேரள அரசு அனுமதி மறுப்பதால் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்று கூறிய முதல்வர், எனினும் சட்ட ரீதியாக பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறினார். இரு மாநிலங்களுக்கு இடையேயான நீர் பிரச்னைகளை தீர்க்கும் வகையில், அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும் இக்குழு விரைவில் கேரளா செல்ல இருப்பதாகவும் முதல்வர் பழனிசாமி உறுதி அளித்தார்.

Related Stories: