பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: மாணவர்களை குழப்பும் ஹால்டிக்கெட்

சிவகங்கை: பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்விற்கான ஹால்டிக்கெட் தேதி வரிசை மாறியுள்ளதால் மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர். பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு வரும் மார்ச் 27ல் தொடங்குகிறது. தேர்வு அட்டவணைப்படி மார்ச்27 தமிழ், மார்ச் 31ல் ஆங்கிலம், ஏப்.3ல் சமூக அறிவியல், ஏப்.7ல் அறிவியல், ஏப்.13ல் கணிதம் என்ற வரிசைப்படி தேர்வு நடக்க உள்ளது. ஆனால் ஹால்டிக்கெட்டில் மார்ச் 27 தமிழ், மார்ச்31 ஆங்கிலம், அதற்கு அடுத்தபடியாக ஏப்.13ல் நடக்கும் கணித தேர்வு, ஏப்.7ல் நடக்க உள்ள அறிவியல், இறுதியாக ஏப்.3ல் நடக்கும் சமூக அறிவியல் பாடத்தை அச்சடித்துள்ளனர்.

இதனால் மாணவர்கள் குழம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு உயர்நிலை மேனிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொது செயலாளர் சேதுசெல்வம் தெரிவித்ததாவது: அடுத்தடுத்த தேதிகளின் வரிசைப்படியே ஹால் டிக்கெட் இருக்க வேண்டும். அப்போது தான் மாணவர்களுக்கு எளிதில் புரியும். ஆனால் தேதி வரிசையை மாற்றி பாட வரிசையை மட்டும் முன்பு போல் வைத்துள்ளனர். முன்பு பொதுத்தேர்வு அட்டவணைப்படி தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என்ற வரிசையில் இருக்கும். தற்போது இதில் கணிதப்பாடத்தை கடைசி தேர்வாக கொண்டு சென்றுள்ளனர்.

சமூக அறிவியல் பாடத்தை மூன்றாவது தேர்வாக நடத்துகின்றனர். இதுபோன்ற தேவையற்ற நடவடிக்கையால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டில் தேதி வரிசைப்படி மாற்றம் செய்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: