விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த திட்டமும் தமிழகத்திற்கு வராது: முதல்வர் பழனிசாமி உறுதி

சென்னை: விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த திட்டமும் தமிழகத்திற்கு வராது என முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கடந்த 9ம் தேதி காலை 10 மணிக்கு கூடியது. அன்றைய தினம்  கூட்டம் தொடங்கியதும் மறைந்த தி,மு,க பொதுச்செயலாளர் க.அன்பழகன் மற்றும் மறைந்த எம்,எல்,ஏக்கள் கே.பி.பி.சாமி, காத்தவராயன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அன்றைய தினம் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதை  அடுத்து, இன்று மீண்டும் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இன்றைய கூட்டத்தொடரில் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.

அப்போது, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என் திமுக எம்எல்ஏ அன்பரசன் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதிய ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்தில் எப்போதும் துவங்கப்படாது என்றும், விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் அத்திட்டத்தை அமல்படுத்த தடை விதிக்கும் வகையில்தான் காவெரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கும் சட்டம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது எனவும் பதிலளித்தார். இது மாநில அரசுக்கு உட்பட்ட சட்டம் என மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெளிவாக தெரிவித்துவிட்டார் எனவும் முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.

மேலும், சட்டத்தில் எந்த குறையும் இல்லை என்றும், குறையிருந்தால்தானே தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் எனவும் முதலமைச்சர் கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில் மீண்டும் மீண்டும் பிரச்னையை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேட முயற்சித்தால், ஒருபோதும் நிறைவேறாது எனவும் முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டார். இதையடுத்து, விவசாய நிலங்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர், அதைத் தடுக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும், சேதப்படுத்தப்படும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: