மதுரையில் ரூ.1 கோடியில் கட்டப்பட்ட ரவுண்டானா உடைந்து சாக்கடைக்குள் சரிந்து விழுந்த அதிமுகவினர்: அமைச்சர் செல்லூர் ராஜூ தப்பினார்

மதுரை: மதுரையில் ரூ.1 கோடி செலவில் அமைக்கப்பட்ட ரவுண்டானாவை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தபோது, திடீரென சிலாப் உடைந்து விழுந்தது. அங்கு நின்றிருந்த அதிமுகவினர் 6 பேர் கழிவுநீர் கால்வாயில்  விழுந்தனர். இதில் அமைச்சர் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் தப்பினார்.தொன்மை நகர் பட்டியலில் மதுரை நகரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நகரின் முக்கியச் சாலை சந்திப்புகளில் ரவுண்டானா அமைத்து, அதில், மதுரை மாநகரின் வரலாற்று சிறப்புகள், தொன்மையை விளக்கும் விதமாக  கலாச்சார சிலைகள், மாதிரி வடிவங்களை அமைக்க மத்திய சுற்றுலாத்துறை உத்தரவிட்டுள்ளது.

 இதனடிப்படையில் திருப்பரங்குன்றம் (ஆறுபடை முருகன் சிலை), பழங்காநத்தம் (திருமலை நாயக்கர் அரண்மனை சிம்மாசனம், பத்து தூண்கள்), ஆரப்பாளையம் சந்திப்பு (ஜல்லிக்கட்டு வீரர் சிலை), பாத்திமா கல்லூரி சந்திப்பு (தமிழன்னை  சிலை), செல்லூர் பாலம் ஸ்டேஷன் சந்திப்பு (கபடி விளையாட்டு வீரர்கள் சிலை), தெப்பக்குளம் பகுதி (பணிகள் நடந்து வருகின்றன) ஆகிய 6 முக்கிய இடங்களில் தலா ரூ.1 கோடியில் ரவுண்டானா அமைத்து, அதற்குரிய சிலை, மாதிரி  வடிவங்கள் நிறுவப்பட்டு வருகிறது. செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் உள்ள ரவுண்டானாவில் கபடி விளையாட்டு வீரர்கள் சிலை நிறுவப்பட உள்ளது. அந்த இடத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று பார்வையிட வந்தார்.

அவருடன் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களும் வந்தனர். அமைச்சர் செல்லூர் ராஜூ, ரவுண்டானாவில் ஏறி உள்புறம் பார்வையிட்டார். அப்போது, சிலை நிறுவ உள்ள இடத்தை அதிகாரிகள் அவரிடம் காண்பித்தனர். பின்னர் அங்கு கூடியிருந்த  கபடி வீரர்கள் மத்தியில் பேசத் துவங்கினார். அப்போது அமைச்சர் நின்றிருந்த இடத்தில் இருந்து சுமார் 2 அடி தூரத்தில் ரவுண்டானாவின் அடியில் செல்லும் கழிவுநீர் கால்வாய் மீது போடப்பட்டிருந்த சிலாப் திடீரென இடிந்து விழுந்தது. சிலாப் மீது நின்றிருந்த அதிமுகவினர் 6 பேர் 8 அடி  ஆழ கால்வாயில் நிலைதடுமாறி விழுந்தனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 6 பேரையும் போலீசார் மற்றும் கட்சியினர் உடனடியாக மீட்டனர். அதில் சிலருக்கு உள்காயம் ஏற்பட்டு வேதனையில் தவித்தனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்த காருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதில்,  அதிர்ஷ்டவசமாக அமைச்சர் தப்பினார். தனது கண் முன்பாக நடந்த இந்த சம்பவத்தைப் பார்த்த அமைச்சர் செல்லூர் ராஜூ அதிர்ச்சியடைந்தார். கட்டுமான பணியை தரமாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார். இதுகுறித்து அப்பகுதி மக்கள்  கூறுகையில், ‘‘செல்லூர் பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் கால்வாய் இந்த ரவுண்டானாவுக்கு அடியில் 50 அடி நீளத்தில் 5 அடி அகலத்தில்  செல்கிறது. அதை ஒரு இஞ்ச் அளவுள்ள டைல்ஸ் சிலாப்பை போட்டு மூடியுள்ளனர். அது எப்படி  தாங்கும்? ஒரு கோடி ரூபாய் செலவில் இந்த பணி நடப்பதாக கூறுகின்றனர். ஆனால், பணிகள் தரமில்லாமல் உள்ளது. மக்கள் பணம் எப்படியெல்லாம் வீணடிக்கப்படுகிறது?’’ என்றனர்.

Related Stories: