மாக்கினாம்பட்டி அரசு பள்ளியில் இட நெருக்கடி: புதிய கட்டிடம் அமைக்க கோரிக்கை

பொள்ளாச்சி:  பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் போதிய இட வசதி இல்லாமல்  மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பொள்ளாச்சி அடுத்த மாக்கினாம்பட்டி கிராமத்தில் கடந்த 1939ம் ஆண்டு தொடங்கப்பள்ளி துவங்கப்பட்டது.  கடந்த 2013ம் ஆண்டு வரை நடுநிலைப்பள்ளியாக செயல்பட்டு வந்த இந்த பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என அப்பகுதி  மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த 2014ம் ஆண்டு மாக்கினாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, அரசு  உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த பள்ளியில் மாக்கினாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பாலமநல்லூர், வைகை  நகர், கல்லாங்காடு, ஜோதி நகர், அமைதி நகர், நேரு நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வந்தனர்.  இந்நிலையில், இந்த பள்ளிக்கு கழிப்பிட வசதி மற்றும்  விளையாட்டு மைதானம் போன்ற அடிப்படை வசதி இல்லாமல் மாணவர்கள் அவதிப்பட்டு  வந்தனர்.

எனவே பாழடைந்து வசதிகளின்றி உள்ள பள்ளி கட்டிடத்தை சீரமைத்து புதுபிக்க வேண்டும் என்று பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை  விடுத்தனர். இதையடுத்து தொடக்கப்பள்ளி மட்டும் கான்கிரீட் கட்டிடங்களில் செயல்பட்டு வருகிறது. 6 முதல் 10ம் வகுப்பு வரை உயர்நிலைப்பள்ளி  வகுப்புகள் மாக்கினாம்பட்டி ஊராட்சியில் திருமலை நகரில் உள்ள கிராம சேவை கட்டிடத்துக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது. ஆனால் கிராம சேவை  கட்டிடத்தில் இடநெருக்கடி காரணமாக அங்கு படித்து வரும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் ஜோதி  நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வரும் மாணவர்கள் வெகுதூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே  சேதமடைந்த பள்ளி  கட்டிடங்களை விரைவில் சீரமைத்து புதிய கட்டிடங்களை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Related Stories: