ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் நூதன முறையில் மிளகாய் செடிகளை பாதுகாக்கும் விவசாயிகள்!

ஆர்.எஸ்.மங்கலம்:  தமிழகத்தில் மிளகாய் விளைச்சலில் ஆர்.எஸ்.மங்கலப் பகுதி மிகவும் முக்கியமான பகுதியாகும். இப்பகுதியில் மிளகாய் விவசாயம் செய்து வரும் விவசாயிகள் பறவைகளிடமிருந்து பாதுகாக்க நூதன முறையை கையான்டு வருகின்றனர். தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சை என்றாலும் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் ஆர்.எஸ்.மங்கலம் உள்ளடக்கிய பிரிக்கப்படாத திருவாடானை தாலுகாவாகும். அதே போல் தமிழகத்தின் மிளகாய் களஞ்சியம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.மங்கலம், பரமக்குடி போன்ற பகுதியாகும். இப்பகுதிகளில் நெல் விவசாயத்திற்கு நிகராக மிளகாய் விவசாயம் செய்யப்படுகிறது. இப்பகுதியில் விளையக்கூடிய மிளகாய் மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் செல்கிறது. இங்கு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்றும் மிகப் பெரிய மிளகாய் சந்தை நடைபெற்று வருகிறது. இதில் ஆர்.எஸ்.மங்கலம் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த மிளகாய் வத்தல்களை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஆர்.எஸ்.மங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளான செட்டியமடை, பிச்சனாகோட்டை, இருதயபுரம், செங்குடி, பூலாங்குடி, வரவணி, வானியக்குடி, வண்டல், சேத்திடல், அரியான்கோட்டை, பணிதிவயல் உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆண்டு அதிகமான அளவில் மிளகாய் பயிரிட்டுள்ளனர். தற்சமயம் மிளகாய் பழம் பழுத்து வருகின்ற சூழ்நிலையில் செடிகளில் பழுத்துள்ள மிளகாய் பழங்களை மைனா, கிளி, கவுதாரி, காகம் உள்ளிட்ட பறவைகள் சேதப்படுத்தி அழித்து வருகின்றன. எனவே பறவைகளிடமிருந்து மிளகாய் பழம் மற்றும் மிளகாய் செடிகளை காப்பாற்றும் விதமாக விவசாயிகள் தங்களின் மிளகாய் வயல்காடுகளில் பாலித்தின் கவர்கள், சேலைத்துணி, கோணி ஆகியவற்றை கொடி மற்றும் தோரணங்கள் போன்று கம்புகளில் கட்டி மிளகாயை பாதுகாத்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயி மலைச்சாமி கூறுகையில், ‘எங்கள் கிராமப் பகுதிகளில் நெல் விவசாயத்தை விட மிளகாய் விவசாயத்தையே முழுமையாக நம்பி விவசாயம் செய்து வருகின்றோம்.

இப்படிர்பட்ட சூழ்நிலையில் மிளகாய் காய்கள் இப்போது பழமாக மாறி பறித்தெடுக்கும் இவ்வேலையில் கிளி, மைனா, கவுதாரி, காகம், மயில் போன்ற பறவைகள் மிளகாய் பழங்கள் பழுத்து வரும் நிலையில் கடித்து குதறி எறிகின்றது. இதனால் எங்களுக்கு கிடைக்கக்கூடிய மகசூழ் பெரும்பாலும் வீணாகி விடுகிறது. இதனால் ஆண் பெண் என பாகுபாடு இல்லாமல் மிளகாய் தோட்டங்களில் போய் பகல் நேரங்களில் டம்மாரம் அடித்து வருவோம். இந்த டமாரம் அடிக்கும் சத்தம் கேட்டு ஓடுவது அதனை அடிக்காமல் நிறுத்திவிட்டால் மீண்டும் வந்து மிளகாய் பழங்களை சேதம் செய்து வந்தது. இதற்கு மாற்றாக பாலித்தீன் பைகள், சேலை, வேல்டி, தோரணக் கொடிகள் போன்றவற்றை கட்டி வருகிறோம். இதன் அசைவுகளை கண்டு பறவைகள் ஒரளவு வராமல் இருப்பதால் பறவைகளால் சேதப்படுத்தும் அத்தனை தோட்டங்களிலும் இதுபோன்ற தோரணங்களை கட்டி பாதுகாத்து வருகிறோம். இந்த முறை நல்ல பலனை கொடுக்கிறது. பறவைகளிடம் இருந்து விவசாயத்தை பாதுகாப்பதற்கு இது சிறந்த முறையாக உள்ளது’ என்றார்.

Related Stories: