கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகாரிகள் சோதனை 600 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்: கடைக்காரர்களுக்கு 1.50 லட்சம் அபராதம்

அண்ணாநகர்:  கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், தடை செய்யப்பட்ட 600 கிலோ பிளாஸ்டிக் பைககளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு ₹1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்களை கண்காணிக்கவும் பறிமுதல் செய்யவும் தனி குழுக்கள் அமைக்கப்பப்பட்டன.  சென்னை மாநகராட்சியில் வார்டு அளவில் 200 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுக்கள் தங்கள் எல்லைக்கு உட்பட்ட கடைகள், வணிக வளாகங்கள், மார்க்கெட் உள்ளிட்டவைகளில் ஆய்வு நடத்தி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறது. மேலும், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோயம்பேடு பூ, காய்கறி மற்றும் பழ மார்க்கெட்டில் தடையை மீறி பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்படுவதாக மார்க்கெட் நிர்வாக அலுவலர் கோவிந்தராஜுக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில்,  கோவிந்தராஜ் மற்றும் சுகாதார ஆய்வாளர் சக்திவேல் தலைமையில் 10 அதிகாரிகள் கொண்ட குழு கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் ஆய்வு நடத்தியது.  அப்போது, சில பழக்கடைகளில் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 100 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். இதேபோல், பூ மார்க்கெட்டில் உள்ள சில கடைகளில் இருந்து 500 கிலோ பிளாஸ்டிக் ைபகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு 1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்தால், கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என அதிகாரிகள் எச்சரித்தனர்.

Related Stories: