சேலம் வன மண்டலத்தில் வனக்குற்றங்களை தடுப்பதற்காக ஹெலிகேம் மூலம் கண்காணிப்பு

சேலம்: சேலம் வன மண்டலத்தில் வனக்குற்றங்களை தடுக்கவும், விலங்குகள் நடமாட்டத்தை அறியவும் வான்வழியில் இருந்து ஹெலிகேம் மூலம் கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக வனத்துறையில் கொடைக்கானல், ஊட்டி, மதுரை, திருநெல்வேலி முண்டன்துறை, ஈரோடு சத்தியமங்கலம், சேலம் சேர்வராயன் மலைத்தொடர் போன்ற இடங்களை கண்காணிக்க நவீன யுக்திகளை வனத்துறை கையாண்டு வருகிறது. வனத்திற்குள் காட்டுத் தீ பரவலை தடுக்கவும், விலங்குகள் வேட்டை மற்றும் சந்தன மரம் உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்களை வெட்டி கடத்தும் செயல்களை கண்டறியவும் வன ஊழியர்கள் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில்,தொலைநோக்கி பயன்பாடு ஆரம்ப காலம் முதலே இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது, வைகை அணை வனப்பயிற்சி கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க பெறப்பட்ட ஹெலிகேம் (ட்ரோன்), வன கண்காணிப்பு பணிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. முதன்முறையாக சேலம் வன மண்டல பகுதியில் இந்த ஹெலிகேம் மூலம் வனப்பகுதிகளை அதிகாரிகள் காண்காணித்து வருகின்றனர். ஹெலிகேம் இயக்கத்தை சரிவர செய்ய வாழப்பாடி வனச்சரகத்தில் பணியாற்றும் 5 வன ஊழியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டு

முதல்கட்டமாக வாழப்பாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட கல்வராயன் மலை தொடரான கோதுமலை, வெள்ளாளகுண்டம் மலை, திருமனூர் ஜம்பூத்துமலை, கிடமலை, நெய்யமலை, அருநூற்றுமலை, பெலாப்பாடி மலை, புங்கமடுவு, புளுதிகுட்டை பகுதிகளில் வான்வழியில் இருந்து, வன விலங்குகள் நடமாட்டத்தையும், வனக்குற்ற தடுப்பு கண்காணிப்பையும் ஹெலிகேம் மூலம் மேற்கொண்டுள்ளனர். இந்த பகுதியில் தொடர்ந்து, கண்காணிப்பை வனச்சரகர் துரைமுருகன், வனவர் சிவக்குமார் தலைமையில் ஊழியர்கள் செய்துள்ளனர்.

ஹெலிகேம் மூலம் எடுக்கப்படும் வீடியோ, புகைப்படங்களை ஆய்வு செய்ய தனிக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. காட்டிற்குள் குற்றச் செயலில் ஈடுபட கும்பல் நடமாட்டம் உள்ளதா?, கோடை வெயில் காரணமாக விலங்குகள் ஊர் பகுதியை நோக்கி இடம் பெயருகிறதா?, காட்டுத் தீ எங்காவது பிடித்திருக்கிறதா? என்பது உள்ளிட்டவற்றை ஹெலிகேம் மூலம் எடுக்கப்பட்ட வீடியோக்கள் மூலம் பார்க்கின்றனர். இதுபற்றி சேலம் மாவட்ட வன அலுவலர் பெரியசாமி கூறுகையில், “வன பயிற்சி கல்லூரி பயன்பாட்டிற்கு வாங்கப்பட்ட ஹெலிகேம், வனக்குற்ற தடுப்பு கண்காணிப்பு பணிக்கு தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாழப்பாடி பகுதியில் உள்ள வனத்தில் இதனைக்கொண்டு ரோந்து மேற்கொள்கிறோம். இதன்மூலம் வனக்குற்றங்களை தடுப்பதோடு, வன விலங்குகள் இடம் பெயர்வதை கண்காணிக்க இயலும். இது வனத்துறை ரோந்து பணிக்கு உதவி கரமாக இருக்கிறது,’’ என்றார்.

Related Stories: