சிவகாசியில் பரபரப்பு: ஏட்டு தூக்கிட்டு தற்கொலை

சிவகாசி,: சிவகாசியில் ஏட்டு தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விருதுநகர் மாவட்டம், சிவகாசியை அடுத்த திருத்தங்கல் அருகே செங்கமலநாச்சியார்புரத்தை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (49). இவர் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பாண்டீஸ்வரி (45). மகள்கள் தாரணி (17) மற்றும் ரோஷிணி (15). முறையே பிளஸ் 2, பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் பணிக்கு சென்ற அலெக்சாண்டர் இரவில் வீடு திரும்பினார்.

மனைவி, மகள்களுடன் ஒரு அறையில் படுத்து தூங்கினார். நேற்று காலை மனைவி கண் விழித்து பார்த்தபோது, அலெக்சாண்டர் வீட்டில் உள்ள மற்றொரு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதை கண்டு பாண்டீஸ்வரியும், மகள்களும் கதறி அழுதனர்.

தகவலறிந்து திருத்தங்கல் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார், சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அலெக்சாண்டரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் குடும்பப் பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது பணிச்சுமை காரணமா என போலீசார் விசாரிக்கின்றனர்.

எஸ்பிக்கு எழுதிய கடிதம் சிக்கியது

தற்கொலை செய்து கொண்ட ஏட்டு அலெக்சாண்டர் வீட்டில் போலீசார் சோதனை செய்த போது ஒரு கடிதம் சிக்கியது. அது தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, நேற்றைய தேதியில் விருதுநகர் மாவட்ட எஸ்பிக்கு அலெக்சாண்டர் எழுதிய கடிதமாகும். அதில் கூறியிருப்பதாவது:புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எனது தாயை, மதுரை தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்த்து சீர் செய்து (கவனித்து) வந்தேன். இதனால் 31.5.2019 அன்று காலை 7 மணிக்கு ஆஜர் அணிவகுப்புக்கு வர இயலவில்லை. 26 ஆண்டுகளாக எந்த தண்டனையுமின்றி கண்ணியமிக்க காவல்துறையில் பணி புரிந்து வந்தேன். அதனால் இந்த குற்றச்சாட்டிலிருந்து என்னுடைய இந்த விளக்கத்தினை கருணையோடு பரிசீலிக்க வேண்டுகிறேன். இனி வருங்காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காது. இந்த குற்றச்சாட்டிலிருந்து என்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ெதாடரும் அவலம்

நான்கு நாட்களுக்கு முன் சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில் பணியில் இருந்தபோது, மதுரை மாவட்டம், மேலூரை சேர்ந்த ஆயுதப்படை காவலர் யோகேஸ்வரன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.  நேற்று முன்தினம் சிவகங்கை இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை மையத்தில் பணியில் இருந்த உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த காவலர் சங்கர்சிங் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை கொண்டார்.  3 நாட்களுக்கு முன் மதுராந்தகத்தை சேர்ந்த தலைமை காவலர் சேகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் விழுப்புரம் மாவட்டம், செஞ்சிமலைமைய சேர்ந்த போலீஸ்காரர் சரவணனும் அன்று தற்கொலை செய்து கொண்டார்.  பணிச்சுமை காரணமாக தமிழகத்தில் தொடரும் தற்கொலையால் போலீசார் மத்தியிலும், அவர்களது குடும்பத்தினரிடையேயும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: