சொத்து வரி பாக்கிக்காக நீரவ் மோடியின் சொத்துக்கள் பறிமுதல்: மும்பை மாநகராட்சி நடவடிக்கை

மும்பை: நிலுவையில் உள்ள ரூ.9.5 கோடி சொத்து வரியை வசூலிப்பதற்காக, வெளிநாட்டுக்கு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடிக்கு சொந்தமாக மும்பையில் உள்ள 4 சொத்துக்களில் 3ஐ மாநகராட்சி பறிமுதல் செய்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பண மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீரவ் மோடிக்கு எதிராக மத்திய அமலாக்கத்துறை ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. மும்பையில் உள்ள நீரவ் மோடியின் 3 வணிக சொத்துக்கள் மற்றும் ஒரு குடியிருப்பு உள்ளிட்ட நான்கு சொத்துக்களை ஏலம் விடும் நடவடிக்கையில் அமலாக்கத்துறை ஈடுபட்டு வருகிறது.

லோயர் பரேல், பிசினஸ் பார்க்கில் உள்ள ஒரு வணிக சொத்து, குர்லா, கோகினூர் சிட்டியில் உள்ள இரண்டு வணிக சொத்துக்கள் மற்றும் கலீனாவில் உள்ள ஒரு குடியிருப்பு சொத்து ஆகியவற்றை ஏலம் விட அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த நான்கு சொத்துக்களுக்கும் நீரவ் மோடி ரூ.9.5 கோடி சொத்து வரி பாக்கி வைத்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனால், நீரவ் மோடிக்கு சொந்தமான மூன்று சொத்துக்களை மும்பை மாநகராட்சி பறிமுதல் செய்துள்ளது.

இந்த நிலையில், இந்த சொத்துக்களுக்கான சொத்து வரியை விரைவில் செத்தும்படி கேட்டு அமலாக்கத்துறைக்கு மும்பை மாநகராட்சி கடிதம் எழுதி இருக்கிறது. நீரவ் மோடியின் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டதும் முதல் நடவடிக்கையாக சொத்து வரி செலுத்தப்பட வேண்டும் என்று மாநகராட்சி கோரியிருப்பதாகவும் அமலாக்கத்துறை இதற்கு சாதகமான பதிலை அளித்து இருப்பதாகவும் அதிகாரி ஒருவர் கூறினார். நீரவ் மோடி மற்றும் அவருடைய மாமா மெகுல் சோக்‌ஷி ஆகியோர் பஞ்பாப் நேஷனல் வங்கியில் ரூ.13,600 கோடி கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை மாநகராட்சி சொத்து வரி பாக்கியை வசூலிக்க கடந்த மாதம் முதல் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சொத்து வரி செலுத்தாதவர்களின் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஏர் கண்டிஷனர்கள், டி.வி.க்கள் மற்றும் மேஜை நாற்காலிகள் போன்ற பொருட்களைக்கூட பறிமுதல் செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

* 5வது முறையாக ஜாமீன் ரத்து

இந்தியாவில் வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு, லண்டனுக்கு தப்பிச் சென்ற நீரவ் மோடிக்கு எதிரான ஆதாரங்களை இந்திய அரசு இங்கிலாந்திடம் தாக்கல் செய்தது. இதையடுத்து கடந்த ஆண்டு மார்ச் 19ல் நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டு, வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு வரும் மே மாதம் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், தனக்கு எதிரான வழக்கில், ஜாமீன் கோரி லண்டன் உயர் நீதிமன்றத்தில் அவர், ஐந்தாவது முறையாக மனுத்தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், நேற்று அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் நீரவ் மோடி சிறையில் இருந்து வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Related Stories: