மேற்கு வங்க மாநிலத்தில் இந்திய வாக்காளர் அடையாள அட்டையில் நாயின் புகைப்படம் இருந்ததால் முதியவர் அதிர்ச்சி

மேற்கு வங்கம்: மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் இந்திய வாக்காளர் அடையாள அட்டையில் நாயின் புகைப்படம் இருந்ததால் முதியவர் அதிர்ச்சியடைந்தார். மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டம் ராம் நகர் கிராமத்தை சேர்ந்த முதியவர் சுனில் கர்மாகர். இவர் தனது வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் கோரி விண்ணப்பம் செய்தார். அந்த அடையாள அட்டையை வாங்கிய சுனிலுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அதில் அவரது படத்துக்கு பதில் நாய் புகைப்படம் இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.

என்னை அழைத்த அதிகாரிகள், திருத்தம் செய்த வாக்காளர் அடையாள அட்டையை கொடுத்தனர். அதில், எனது புகைப்படத்திற்கு பதில் நாய் புகைப்படம் இருந்தது. அட்டையில், அதிகாரியும் கையெழுத்திட்டுள்ளார். ஆனால், அவரும் அதனை பார்க்கவில்லை. அதிகாரிகள் எனது கவுரவத்துடன் விளையாடுகின்றனர். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுக்க உள்ளேன் என கூறினார்.

தவறு நடந்திருப்பின், அது சரி செய்யப்படும் எனவும், அட்டையில் நாய் புகைப்படம் இடம்பெற்றது கவலைக்குரிய வி‌ஷயம் என வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜரிஷி சக்ரவர்த்தி கூறினார். ஆன்லைன் விண்ணப்பம் மூலம் அட்டை தயாரிக்கும் போது, அதிகாரி ஒருவரால், தவறு நடந்துள்ளது என தெரிவித்தார். போட்டோ மாற்றப்பட்டுள்ளது மேலும் விரைவில், திருத்தம் மேற்கொள்ளப்பட்ட புதிய வாக்காளர் அட்டை வழங்கப்படும் என கூறினார்.

Related Stories: