சென்னை அண்ணா மேம்பாலம் அருகே குண்டு வீச்சு ; பைக் உரிமையாளர் அடையாளம் தெரிந்தது

சென்னை: சென்னை அண்ணா மேம்பாலம் அருகே குண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்புடைய இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் அடையாளம் தெரிந்தது. தியாகராயநகர் ராஜாபிள்ளை தோடடத்தை சேர்ந்த தேவதாஸ் என்பவரின் இருசக்கர வாகனம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருசக்கர வாகனத்தை நந்தனம் அரசு கல்லூரியில் படிக்கும் மாணவன் ஓட்டி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை மாநகரின் இதயப் பகுதியாக அண்ணாசாலை உள்ளது. இதனால் எப்போதும் வாகன நெரிசலுடன் காணப்படும். அண்ணா மேம்பாலம் அருகே அமெரிக்க துணை தூதரகம், காமராஜர் அரங்கம், செம்மொழி பூங்கா ஆகியவை உள்ளதால் எப்போதும் அங்கு வாகன நெரிசல் அதிகமாக இருக்கும். மக்கள் பரபரப்புடன் சென்று வந்த வண்ணம் இருப்பார்கள்.

நேற்று மாலை 4 மணி அளவில் அண்ணாசாலையில் கடும் போக்குவரத்து நெரிசலுடன் வாகனங்கள் சென்று கொண்டிருந்தது.  திடீரென சாலையில் வெடி குண்டு வெடித்ததால் வாகன ஓட்டிகள் அலறி அடித்து கொண்டு தங்களது வாகனங்களை ஆங்காங்கே விட்டுவிட்டு என்ன நடக்கிறது என்ற தெரியாமல் உயிர் பிழைத்தால் போதும் என்று சிதறி ஓடினர். இதனால் சிறிது நேரம் அங்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் கூச்சல் மற்றும் குழப்பம் நிலவியது. வெடி குண்டுகள் வீசிய வாலிபர்கள் தங்களது பைக்கில் மின்னல் வேகத்தில் சென்று தலைமறைவாகினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூடுதல் கமிஷனர் பிரேம் அனந்த் சிங்கா, தி.நகர் துணை கமிஷனர் அசோக் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். இதற்கிடையே தேனாம்பேட்டை போலீசார் வெடி குண்டு வீச்சு சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று குண்டு வீசிய 2 நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் அடையாளம் தெரிந்தது. தியாகராயநகர் ராஜாபிள்ளை தோடடத்தை சேர்ந்த தேவதாஸ் என்பவரின் இருசக்கர வாகனம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories: