ராஜிவ்காந்தி குறித்து அவதூறு வீடியோ சீமானை கைது செய்ய வலியுறுத்தி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்: மனநல சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் மனு

சென்னை: ராஜிவ் காந்தியை படுகொலை செய்தது நாங்கள்தான் என்று கூறும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானையும், ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ்காந்தி நினைவிடத்தில், ‘அவரை நாங்கள்தான் கொன்றோம்’ என்று அவதூறாக பேசி டிக்டாக் செயலியில் வீடியோ வெளியிட்ட திருச்சியை சேர்ந்த துரைமுருகன் என்பவரையும் கைது செய்யக்கோரி வடசென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் தண்டையார்பேட்டை, தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமை வகித்தார்.

தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அந்த வாலிபரை கைது செய்ய வலியுறுத்தி காவல்துறை துணை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகார் மனுவை பெற்றுக் கொண்ட வடக்கு காவல்துறை துணை ஆணையாளர் சுப்புலட்சுமி, சம்பந்தப்பட்ட வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்து சிஎஸ்ஆர் வழங்கினார். வடசென்னை முன்னாள் மாவட்ட தலைவர் டி.வி.துரைராஜ், இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் எஸ்.ரஞ்சித் குமார், கன்னியப்பன், அருண்குமார், எஸ்.தீபக், சர்க்கிள் தலைவர்கள் வி.ஜெய்சங்கர், சக்தி டி.நாகேந்திரன், நஜ்மா ஷெரிப், ஆர்.கே.நகர்.சையத், சீமான் செல்வராஜ், டி.கே.மூர்த்தி, எஸ்.நிலவன், ரவிக்குமார், என்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் உடன் இருந்தனர்.  

அதேபோன்று, ராஜிவ்காந்தி நினைவிடத்தில் அவதூறு டிக்டாக் வெளியிட்ட துரைமுருகன் மற்றும் அந்த வீடியோவை எடுத்த நபரையும் கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் என கீழ்ப்பாக்கம் மனநோய் மருத்துவமனை இயக்குனரிடம், மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் வீரபாண்டி தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இதில், மாவட்ட துணை தலைவர்கள் மோகனரங்கம், சூளை ராமலிங்கம், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: