டாஸ்மாக் கடைகளில் 21 வயது குறைவானவர்களுக்கு மது வழங்குவதை தடுக்க நடவடிக்கை: அதிகாரி தகவல்

சென்னை: டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது வழங்குவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். வளரும் இளம் தலைமுறையினர் மதுவுக்கு அடிமையாவதை தடுக்க டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், பல இடங்களில் டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது வழங்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.    

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது வழங்குவதை தடுக்க தீவிர ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். குறிப்பாக, கடை விற்பனையாளர்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மதுவாங்க வரும் நபர் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்தானா என்பதை அறிய அவரின் அடையாள அட்டை அதாவது ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளவற்றை பெற்று சரிபார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள மாவட்ட மேலாளர்கள் இப்பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். திடீர் தணிக்கையின் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மாவட்டம் தோறும் சட்டவிரோதமாக மது வழங்குதலை தடுக்க விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் நடத்தி வருகிறோம். கடைகளுக்கு வெளியே அறிவிப்பும் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: