திமுக பிரமுகர் மகன் கொலையில் கீழ் நீதிமன்றம் விடுவித்த 7 பேருக்கு ஆயுள் தண்டனை: ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை: திமுக பிரமுகர் மகன் கொலையில் கீழ்நீதிமன்றம் விடுவித்த 7 பேருக்கு ஐகோர்ட் கிளை ஆயுள் தண்டனை விதித்துள்ளது. மதுரை, மேல அனுப்பானடியை சேர்ந்தவர் திமுக பிரமுகர் முருகன். இவரது உறவினர் தவணை முருகன் என்பவர் ஒரு வழக்கில், கடந்த 2007ல் திருப்பரங்குன்றம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதற்கு, அதே பகுதியைச் சேர்ந்த  பால்பாண்டிதான் காரணம் எனக்கூறி தவணை முருகன் தரப்புக்கும், பால்பாண்டி தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த பால்பாண்டி, தனது நண்பர்களுடன் ேசர்ந்து திமுக பிரமுகர் முருகனின் மகன்  முத்துக்குமாரை, சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.  இதுகுறித்து அவனியாபுரம் போலீசார், பால்பாண்டி, வீரபாண்டி, ராமச்சந்திரன், வில்வத்துரை, பாண்டி, சின்னமணி, மூர்த்தி மற்றும் கண்ணன் ஆகிய 8 பேரை கைது செய்தனர். இந்த  வழக்கின் விசாரணை மதுரை 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.

இந்த வழக்கில் கடந்த 28.4.2017ல் தீர்ப்பளித்த நீதிமன்றம், இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி விடுதலை செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து கொலையான முத்துக்குமாரின் தந்தை முருகன், ஐகோர்ட் மதுரை  கிளையில் அப்பீல் செய்தார். மனுவை நீதிபதிகள் டி.ராஜா, பி.புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். இந்த மனு விசாரணையில் இருந்த காலத்தில் பால்பாண்டி கொலை செய்யப்பட்டார்.  மனுவை விசாரித்த நீதிபதிகள் கொலையான பால்பாண்டி தவிர மற்ற 7 பேர் மீதான குற்றச்சாட்டு உறுதியாகிறது எனக்கூறி, 7 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தனர்.

Related Stories: