முன்னாள் சார் பதிவாளர், மனைவிக்கு 5 ஆண்டு சிறை: ரூ.100 கோடி சொத்து பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

திருச்சி: சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் சார்-பதிவாளர் மற்றும் அவரது மனைவிக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்துள்ள திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அவர்களின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் தாத்தையங்கார் பேட்டை பில்லாதுரை கிராமத்தை சேர்ந்தவர் ஜானகிராமன் (79). சார்பதிவாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் சார்பதிவாளராக இருந்தபோது 1989-1993 இடைப்பட்ட ஆண்டுகளில் வருமானத்திற்கு அதிகமாக இவரது பெயரிலும், மனைவி வசந்தி (65) பெயரிலும் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார். இதன் அப்போதைய மொத்த மதிப்பு ரூ.32 லட்சம் ஆகும்.

இதையடுத்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 17.08.2001 அன்று திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்து நீதிபதி கார்த்திகேயன் நேற்று தீர்ப்பளித்தார். இதில், குற்றவாளிகளான ஜானகிராமன், அவரது மனைவி வசந்தி ஆகிய இருவருக்கும் தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், மேற்படி வருமானத்திற்கு அதிகமாக குற்றவாளிகளால் சேர்க்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்து அரசிடம் ஒப்படைக்கும்படி அதிரடியாக தீர்ப்பளித்து உத்தரவிட்டார். ஜானகிராமன் அவரது பெயரிலும், அவரது மனைவி வசந்தி பெயரிலும் வில்பட்டி மற்றும் கொடைக்கானல் பகுதியில் வாங்கிய சொத்துக்களின் தற்போதைய மொத்த மதிப்பு ரூ.100 கோடிக்கு மேல் என்பது குறிப்பிடதக்கது.

The post முன்னாள் சார் பதிவாளர், மனைவிக்கு 5 ஆண்டு சிறை: ரூ.100 கோடி சொத்து பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: