ஜப்பானில் டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் சிக்கிய 119 இந்தியர்கள் தனி விமானத்தில் டெல்லி அழைத்து வரப்பட்டனர்: சீனாவில் இருந்தும் 112 பேர் மீட்பு

புதுடெல்லி:  ஜப்பானில் ‘டைமண்ட் பிரின்சஸ்’ கப்பலில் இருந்த 119 இந்தியர்களும், 5 வெளிநாட்டினரும் சிறப்பு விமானத்தில் நேற்று டெல்லி அழைத்து வரப்பட்டனர். சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பலில் ஒருவரை தாக்கியது. இதனால், ஜப்பானின் யோகோஹாமா கடல் பகுதியில் கடந்த 3ம் தேதி 3,711 பேருடன் இக்கப்பல் தனிமைப்படுத்தப்பட்டது.  கப்பலில்  இருந்த பயணிகள், ஊழியர்கள் யாரும் வெளியேற அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து நடத்தப்பட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகளில் கொரோனா வைரஸ் இருப்பவர்கள் அடையாளம் காணப்பட்டு சிகிச்சைக்காக சிறப்பு மையங்களுக்கு  அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற பயணிகள் மற்றும் ஊழியர்கள் கப்பலிலேயே தங்க வைக்கப்பட்டனர். அனைவருக்கும் முழு பரிசோதனை செய்து ெகாரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டவர்கள் மட்டும் கப்பலில் இருந்து வெளியேற  அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இக்கப்பலில் 138 இந்தியர்கள் இருந்தனர். இவர்களில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இக்கப்பலில் சிக்கிய இந்தியர்களை  மீட்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதற்காக, டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் சிறப்பு விமானம் ஜப்பான் சென்றது. கப்பலில் இருந்த 119 இந்தியர்களை அழைத்துக் கொண்டு, இந்த விமானம் நேற்று காலை டெல்லி  திரும்பியது. இதில், இலங்கையை சேர்ந்த 2 பேர், நேபாளம், தென் ஆப்ரிக்கா மற்றும் பெருவை சேர்ந்த தலா ஒருவர் என ஐந்து பேரும் அழைத்து வரப்பட்டனர். இவர்கள் டெல்லி மானேசர் ராணுவ சிகிச்சை மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு,  கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.  மேலும், கப்பலில் இருந்த 3 இந்தியர்கள் சிறப்பு விமானத்தில் அழைத்து வரப்படவில்லை. அவர்கள் ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், சீனாவில் கொரோனா வைரஸ் பரவிய வுகான் நகருக்கு இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானம் நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றது. இதில், முககவசம் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் 15 டன்  எடுத்து செல்லப்பட்டது. இந்த விமானம் நேற்று டெல்லி திரும்பியது. இதில், வுகானில் இருந்து 112 பேர் அழைத்து வரப்பட்டனர். இவர்களில் 76 பேர் இந்தியர்கள். இது தவிர, வங்கதேசத்தை சேர்ந்த 23 பேர், சீனாவை சேர்ந்த 6 பேர், மியான்மர்  மற்றும் மாலத்தீவை சேர்ந்த தலா 2 பேர், தென் ஆப்ரிக்கா, அமெரிக்கா மற்றும் மடகாஸ்கரை சேர்ந்த தலா ஒருவர் என 36 பேர் அழைத்து வரப்பட்டு இருந்தனர். ஏற்கனவே வுகானில் இருந்து 723 இந்தியர்கள், 43 வெளிநாட்டினரை மத்திய அரசு  மீட்டு வந்தது.

ஈரானில் 22 பேர் பலி

ஈரானில் கொரோனா வைரஸ் பரவுவது கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகின்றது. 31 மாகாணங்களில் 20 மாகாணங்களில் இந்த வைரஸ் பரவ தொடங்கி உள்ளது. வைரசால் 141 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 22 பேர் உயிரிழந்து  உள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Stories: