ஒரே குடும்பத்தில் 6 பேரை கொன்ற ‘சீரியல் கில்லர்’ ஜோளி சிறையில் தற்கொலை முயற்சி

திருவனந்தபுரம்: கேரளாவில்  கணவன், மாமனார் உள்பட ஒரே குடும்பத்ைத சேர்ந்த 6 பேரை கொன்ற வழக்கில் கைது  செய்யப்பட்ட ஜோளி நேற்று அதிகாலை சிறையில் தற்கொலைக்கு முயன்றது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கூடத்தாய் பகுதியைச் சேர்ந்தவர் டோம் தாமஸ் (75). இவரது மனைவி அன்னம்மா.  இவரது மகன் ராய் தாமஸ். இவரது மனைவி ஜோளி. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில்  வசித்தனர். கடந்த 2002ல் இருந்து 2016ம் ஆண்டு  வரையில் மாமனார், மாமியார், கணவர், சின்ன மாமனார் என்று 6 பேரை சொத்துக்காக அனைவருக்கும் சயனைடு  கொடுத்து கொன்றது தெரியவந்தது.

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு  முன்பு போலீசார் ஜோளியை  கைது செய்தனர். அதோடு அவருக்கு  உடந்தையாக இருந்த மேலும் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். ஜோளி தற்போது  கோழிக்கோடு மத்திய சிறையில்  அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை சிறையில் கை நரம்பு அறுக்கப்பட்ட நிலையில் ஜோளி ரத்த  வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த சிறை  அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு  கோழிக்கோடு அரசு  மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அதைத் தொடர்ந்து  டாக்டர்கள் ஜோளிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கை நரம்பை ஜோளி எவ்வாறு அறுத்தார்?  தற்கொலைக்கு முயன்றது ஏன்? என்பது  உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து சிறைத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: