திருப்புவனத்தில் பொதுமக்கள் எதிர்ப்பால் அரசுப்பணிக்கான கல்வெட்டில் அதிமுக சின்னம் அதிரடி அகற்றம்

திருப்புவனம்: திருப்புவனத்தில் அரசு பணி கல்வெட்டில் அதிமுக சின்னம் பொறிக்கப்பட்டு இருந்தது. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே  உடைத்து அகற்றப்பட்டது.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் நெல்முடிகரை கூட்டுறவு சங்கத்திற்காக ரூ.19 லட்சம் செலவில் புதிய கிட்டங்கி கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை  வகித்தார். கதர்வாரிய தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன், கலெக்டர் ஜெயகாந்தன், தாசில்தார் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதற்காக வைக்கப்பட்ட கல்வெட்டின் மேல் பகுதியில், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. கூட்டுறவுத்துறை சார்பில் நடந்த இந்த விழாவில், கூட்டுறவுத்துறையில் இருந்துதான் பணம் செலவழிக்கப்பட்டது. அதிமுக  கட்சி சார்பாக விழா நடத்தப்படவில்லை. இந்த சூழலில் அரசுப்பணிக்கான கல்வெட்டில் அதிமுகவின் சின்னத்தை பொறித்ததற்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து விழா முடிந்து  அமைச்சர்கள் சென்றவுடன் கல்வெட்டில் இருந்த இரட்டை இலை சின்னத்தை அதிகாரிகள் உடைத்து அகற்றினர். அரசு விழா கல்வெட்டில் அதிமுக சின்னம் பொறிக்கப்பட்டு, பொதுமக்கள் எதிர்ப்பால் அகற்றப்பட்ட சம்பவம் திருப்புவனத்தில்  பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: